Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தேர்தல்களில் ஓட்டுச்சாவடி முறைகேடு: சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு

ஜுலை 24, 2021 11:22

புதுடெல்லி-'தேர்தல்களின்போது ஓட்டுச்சாவடிகளை கைப்பற்றுதல், கள்ள ஓட்டு உள்ளிட்டவற்றை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தலில் ஓட்டுச் சாவடியில் கலவரம் ஏற்படுத்திய வழக்கில் ஆறு மாத சிறை தண்டனை பெற்ற லக்ஷ்மண் சிங் என்பவர், உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்தார்.விசாரணைக்கு பின், மனுவை நேற்று தள்ளுபடி செய்த நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், எம்.ஆர்.ஷா ஆகியோர் அமர்வு பிறப்பித்த உத்தரவு: ஓட்டளிக்கும் உரிமை, தனி மனிதனின் கருத்து சுதந்திரம். தேர்தல் முறையின் கோட்பாடு, வாக்காளர்களின் சுதந்திரமான, தனிப்பட்ட எண்ணத்தை பிரதிபலிப்பதை உறுதி செய்வதாக இருக்க வேண்டும்.

எனவே ஓட்டுச்சாவடிகளை கைப்பற்றுதல், கள்ள ஓட்டுப் போடுதல் உள்ளிட்ட எந்த முயற்சிகளையும், இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.இல்லாவிடில் நாட்டில் சட்டத்தின் ஆட்சியும், ஜனநாயகமும் கடுமையாக பாதிக்கப்படும். ஜனநாயகத்தை வலுப்படுத்த ஓட்டளிப்பில் ரகசியம் காக்கப்பட வேண்டியதும் அவசியம்.நேரடி தேர்தல் நடக்கும் ஜனநாயக நாடுகளில் வாக்காளர் அச்சமின்றி ஓட்டளிப்பதை உறுதி செய்ய வேண்டியது அவசியம்.

ஏனெனில் அவரது ஓட்டு விபரம் வெளியாவது, அவரை பாதிப்பிற்கு உள்ளாக்கும்.ஜனநாயகம் மற்றும் சுதந்திரமான, நியாயமான தேர்தல் என்பது அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பின் முக்கிய பகுதி. இது, மக்களின் விருப்பத்தை பிரதிபலிக்கும் வழிமுறை. இதனை செல்லாததாக்கும் நடவடிக்கைகளை, ஏற்க முடியாது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தலைப்புச்செய்திகள்