Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

டெல்லியில் பறவை காய்ச்சலுக்கு சிறுவன் பலி

ஜுலை 21, 2021 05:20

புதுடெல்லி: உலகையே உலுக்கி வரும் கொரோனா நோய் இன்னும் முடிவுக்கு வராததால் எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என்ற அச்சநிலையிலேயே நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறறோம். இந்த நேரத்தில் டெல்லியில் பறவை காய்ச்சல் வைரஸ் தாக்கி சிறுவன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது.

பறவைகளை ‘ஏவியன் இன்புளுயன்சா’ என்ற வைரஸ்கள் தாக்குவது உண்டு. இந்த வைரஸ்களில் பலவகைகள் உள்ளன. அவற்றில் சில பறவைகளுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி உயிரிழப்புகளை உருவாக்கும். இவ்வாறு ஏற்படும் நோயை பறவை காய்ச்சல் என்று அழைக்கிறார்கள்.

பறவை காய்ச்சலை ஏற்படுத்தும் ஒரு வகை வைரசை ‘எச்5 என்8’ என்று குறிப்பிடுகிறார்கள். அந்த வகையான வைரஸ் பறவைகளிடம் இருந்து பரவி மனிதனையும் தாக்குவது உண்டு. இதனால் காய்ச்சல், தலைவலி உள்ளிட்ட சில அறிகுறிகள் ஏற்படும். அதனால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படாது.

இந்த நிலையில் பறவை காய்ச்சல் தாக்கி முதன் முதலாக சிறுவன் உயிரிழந்திருக்கிறான். இந்த சிறுவன் அரியானா மாநிலத்தைச் சேர்ந்தவன். இவனுக்கு 11 வயது ஆகிறது. அவனுக்கு திடீரென்று காய்ச்சல் ஏற்பட்டது. பின்னர் மூச்சுத்திணறலும் ஏற்பட்டது.
கிசிச்சை அளித்தும் நோய் குணமாகவில்லை. எனவே கடந்த 2-ந் தேதி அவனை டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு பரிசோதித்ததில் ‘எச்5 என்8’ வைரஸ் தாக்கி இருப்பது தெரியவந்தது. அவனுக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல் நேற்று உயிரிழந்துவிட்டான். பறவை காய்ச்சலுக்கு இந்தியாவில் ஏற்பட்ட முதல் உயிரிழப்பு என்பதால் மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற் கொண்டுள்ளனர்.

அந்த சிறுவனுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், நர்சுகள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். மேலும் சிறுவனோடு தொடர்பில் இருந்த அனைவரையும் அடையாளம் கண்டு தனிமைப்படுத்தவும், மருத்துவ சிகிச்சை அளிக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது. இது சம்பந்தமாக தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் வெளியிட்டுள்ள செய்தியில், எந்த பகுதியிலாவது பறவைகள் இறந்தால் உஷாராக இருக்க வேண்டும்.

இந்த வைரஸ் கண், மூக்கு, வாய் மற்றும் சுவாசம் மூலமாக பரவுவதற்கு வாய்ப்பு உண்டு. காற்றின் மூலம் பரவக் கூடியது. எனவே மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டால் காய்ச்சல், சளி, தொண்டை வலி, உடல் வலி, தலைவலி, கண்கள் சிவப்பாகுதல், மூச்சு விடுவதில் சிரமங்கள் போன்றவை ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்