Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பார்களில் பிளாஸ்டிக் பயன்பாடு: அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காதது ஏன்?

ஏப்ரல் 25, 2019 11:23

திருவள்ளூர்: திருவள்ளூரில் இருந்து புட்லூர் செல்லும் சாலையில், டாஸ்மாக் மதுபான கடைகள் இயங்கி வருகின்றன. அங்குள்ள கடைகள் மற்றும் பார்களில், மது அருந்த தேவையான வாட்டர் பாக்கெட், டம்ளர் ஆகிய தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்கின்றனர். 

இதை குடிமகன்கள் வாங்கிவந்து அங்கேயே உட்கார்ந்து குடித்துவிட்டு வீசி செல்கின்றனர். இதனால், டாஸ்மாக் கடை மற்றும் பார்களின் அருகே எங்கு பார்த்தாலும் பாலித்தீன் மயமாக உள்ளது. இதனால், அவை காற்றில் பறந்து, குப்பையாகி, சுற்றுப்புற சூழலை மாசுபடுத்துகின்றன. 

இதிலிருந்து, புற்று நோயை ஏற்படுத்த கூடிய, ‘டயாக்சின்’ என்னும் நச்சு பொருள் வெளியாகி, அவ்வழியாக செல்பவர்களுக்கு டி.பி., ஆஸ்துமா போன்ற நோய்களும், பிற பக்க விளைவுகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. 

மேலும், சாலையோரங்களில் தேங்கி கிடக்கும் பிளாஸ்டிக் குப்பைகள் அசுத்தத்தை ஏற்படுத்தி டெங்கு, மலேரியா என பல நோய்கள் தோன்ற காரணமாகிறது. மழைக்காலத்தில் சாலைகள் வெள்ளக்காடாக மாறுவதற்கு இந்த பிளாஸ்டிக்குகளே முதற்காரணம். 

இதை தின்னும் மாடுகள் போன்ற விலங்குகளின் உணவுக்குழாய்கள் பாதிக்கப்பட்டு அவைகள் இறக்க நேரிடுகிறது. மக்காத பிளாஸ்டிக் பொருட்கள் விவசாய நிலங்களில் தேங்கி அதன் வளத்தை குறைத்து நஞ்சாக்குகிறது. 

மேலும் பயிர் வளர்ச்சியையும் பாதிக்கிறது. இதையடுத்து, மாவட்டத்தில் கடந்தாண்டு ஆகஸ்ட் 15ம் தேதி முதல் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு முற்றிலும் தடை வைத்துள்ள நிலையில், நகராட்சி சுகாதாத்துறை அதிகாரிகள் கடை, கடையாக ஆய்வு செய்து வருகின்றனர். 

ஆனால், பிளாஸ்டிக் டம்ளர்கள், தண்ணீர் பாக்கெட்டுகளை அதிகளவில் பயன்படுத்தும் டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களில் மட்டும் அவர்கள் ஆய்வுக்கு செல்வதில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். 

எனவே, பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தடுக்க நகராட்சி அதிகாரிகள் அனைத்து டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களில் ஆய்வுசெய்து தடைவிதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தலைப்புச்செய்திகள்