Sunday, 16th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ராமநாதபுரம் அருகே மனைவியிடம் முத்தலாக் கூறிய கணவர் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு

ஜுலை 17, 2021 12:18

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டினம் அருகே மனைவியிடம் முத்தலாக் கூறிய கணவர் உட்பட 4 பேர் மீது முஸ்லிம் பெண்கள் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

முத்தலாக்குக்கு தடை விதிக்கும் முஸ்லிம் பெண்கள் திருமணஉரிமைகள் பாதுகாப்புச் சட்டத்தை 2019-ம் ஆண்டில் மத்தியஅரசு கொண்டு வந்தது. இதன்படிசட்டவிரோதமாக முத்தலாக் சொல்லும் முஸ்லிம் கணவர்களுக்கு சிறை தண்டனை விதிக்க வகை செய்யப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், எஸ்.பி.பட்டினம் எஸ்.எம்.நகரைச் சேர்ந்தவர் செய்யது முகமது (35).இவரது மனைவி அனீஸ் பாத்திமா(32). இவர்களுக்கு 10ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஆனால், குழந்தைகள் எதுவும் இல்லை.

சமீபத்தில் செய்யது முகமது சவூதி அரேபியாவில் பணிபுரிந்து வந்த நிலையில் தனக்கு குழந்தை இல்லை என்பதால் மற்றொரு திருமணம் செய்துகொள்ள உள்ளூர் ஜமாத் மூலம் தனது மனைவியை விவாகரத்து செய்ய மனு அளித்தார். ஆனால், உள்ளுர் ஜமாத்தார்கள் இது தொடர்பாக எந்தவிதமான முடிவும் எடுக்கவில்லை.

கடந்த ஜூன் 26-ம் தேதி செய்யது முகமது 3 பேருடன் அனீஸ் பாத்திமா வீட்டுக்குச் சென்று அவரிடம் முத்தலாக் கூறியுள்ளார். மேலும் கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அனீஸ் பாத்திமா திருவாடானை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் முஸ்லிம் பெண்கள் பாதுகாப்புச் சட்டம் உள்ளிட்ட 2 பிரிவுகளின்கீழ் செய்யது முகமது, உறவினர்கள் ரகுமத்அலி(46), சேக்காதி அம்மாள்(40), ஜகுபா் (44) ஆகிய 4 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தலைப்புச்செய்திகள்