Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கைலாசா நாட்டுக்கு ஐ.நா. சபை அங்கீகாரம்? நித்யானந்தா வீடியோவால் பரபரப்பு

ஜுலை 16, 2021 04:13

புதுடெல்லி: இந்தியாவில் குற்ற வழக்குகளில் தேடப்படும் சாமியார் நித்யானந்தா வெளிநாட்டுக்கு தப்பி ஓடி விட்டார். அவர் வட அமெரிக்கா கண்டத்தில் ஒரு தீவை விலைக்கு வாங்கி கைலாசா என பெயர் சூட்டி இருப்பதாக தகவல் வெளியானது. தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தாலும் சமூக வலைத்தளங்களில் அவர் தனது சீடர்களுடன் சத்சங்கம் மூலம் உரையாடி வருகிறார். அவரது சொற்பொழிவுகள் அடிக்கடி வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

குறிப்பாக அவர் தன் மீது போலீசார் பொய் வழக்கு போட்டுள்ளதாக கூறி போலீசை கிண்டல் செய்யும் வீடியோக்கள் அதிகமாக பரவியது. இதற்ககிடையே அவர் தான் உருவாக்கிய கைலாசா நாட்டுக்கு ஐக்கிய நாடுகள் சபையில் அங்கீகாரம் பெறும் முயற்சியிலும் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளிவந்தன. 

இந்நிலையில் கைலாசா நாட்டை யூனியன் பிரதேசமாக ஐ.நா.சபை அங்கீகாரம் வழங்கி இருப்பதாக அவரது பக்தர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிடும் பதிவுகளில் ஐக்கிய நாடுகள் சபையின் பெண்களுக்கு எதிரான பாகுபாட்டை ஒழிப்பதற்கான குழு கைலாசா நாட்டை அங்கீகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

இதுதொடர்பாக நித்யானந்தாவும் வீடியோவில் பேசியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- விவேகானந்தரும் விரும்பினார், யோகா நந்தரும் இயங்கினார், அரவிந்த்தரும் வாழ்வெல்லாம் அலறி துடித்து முயற்சித்தார். சதாசிவன் செய்து முடித்தார். ராமகிருஷ்ணன், விவேகானந்தர், யோகாநந்தர், அரவிந்தர், காஞ்சன் காடபத்ம ராமதாஸ், ரமண மகரிஷி போன்ற எல்லோரும் செய்த ஒரு கலெக்டிவ் முயற்சி. சதாசிவன் அருளால் இப்போது நித்யானந்தன் நிறைவேற்றி இருக்கிறார். இது உங்கள் வாழ்க்கையின் நோக்கம் அல்ல. மனித உயிர் வாழ்க்கையின் நோக்கம் அல்ல. உயிர் இனத்தின் நோக்கத்தை நிறைவேற்றுகின்றான்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார். 

நித்யானந்தாவின் இந்த வீடியோ பதிவு கைலாசா நாட்டுக்கு ஐ. நா. சபை அங்கீகாரம் வழங்கியதை அவர் கூறுவது போல் உள்ளது.

தலைப்புச்செய்திகள்