Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மாறிவரும் தொழில்நுட்ப உலகில் திறன், மறு திறன், உயர்திறன் பெற்றவர்களுக்கே அதிக வாய்ப்பு: பிரதமர் நரேந்திர மோடி கருத்து

ஜுலை 16, 2021 11:03

மாறிவரும் தொழில்நுட்ப உலகில் திறன், மறுதிறன், உயர்திறன் பெற்றவர்களுக்குத்தான் அதிக வாய்ப்புகள் கிடைக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.

`உலக திறன் தின'-த்தை முன்னிட்டு அவர் கூறியதாவது: தற்போது தொழில்நுட்ப உலகில் மிகப் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்துவருகின்றன. இதற்கேற்ப திறன்மிக்கவர்கள், மறுதிறன் பெற்றவர்கள், உயர்திறன் பெற்றவர்களுக்கான வாய்ப்பு அதிகரித்துக் கொண்ட வருகிறது. இவர்களுக்கு மிகஅதிக அளவிலான தேவை உள்ளது. வளர்ந்து வரும் புதிய தலைமுறையினருக்கு திறன் மிகவும் அவசியம்.

இந்தியா தற்போது சுயசார்பு பொருளாதாரத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. உள்நாட்டிலேயே அனைத்து பொருட்களும் உற்பத்தி செய்வதை ஊக்குவிக்கும் வகையிலான சுயசார்பு இந்தியா திட்டம்இனி வரும் காலங்களில் பல திறன்மிக்கவர்களுக்கு வாய்ப்பளிப்பதாக அமையும். கடந்த 6 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட திறன் மேம்பாட்டு நடவடிக்கைகள் தற்போது உரிய பலனை அளிக்கத் தொடங்கியுள்ளது.

வேலை செய்து சம்பாதிக்கத்தொடங்கியவுடன் கற்றுக்கொள்வதை நிறுத்தக் கூடாது. தங்கள் தொழில் சார்ந்த திறனை வளர்த்துக்கொள்பவர்கள்தான் இன்று முன்னேற்றமடைகின்றனர். உலகளவில் இதுதான் நடைமுறையாக உள்ளது. திறன் பெற்றவர்கள் தங்களது திறனை மேலும் வளர்த்து மறுதிறன் பெற்றவர்களாக உயர்த்திக்கொள்ள வேண்டும். மறுதிறன் பெற்றவர்கள் அதை உயர் திறனாக உயர்த்திக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். திறமை மிக்கஇளைஞர்களை உலகிற்கு அளிக்கும் நாடாக இந்தியா விளங்குகிறது. `பிரதம மந்திரி கௌஷல் விகாஸ் யோஜனா’ திட்டத்தின் மூலம் 1.25 கோடி இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. திறன் பெற்றவர்கள்தான் கரோனாவுக்கு எதிரான பணிகளில் மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். சுய சார்பு பொருளாதார கட்டமைப்புக்கு அடித்தளமிடும் சுயசார்பு இந்தியா திட்டத்தை முன்னெடுத்து இளைஞர்கள் திறனை வளர்த்துக் கொள்வது அவசியம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்