Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வாரணாசி தொகுதியில் ரூ.1,500 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி திட்டங்கள்- பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

ஜுலை 15, 2021 01:45

வாரணாசி: பிரதமர் மோடி உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதி எம்.பி.யாக உள்ளார். தனது தொகுதிக்கு அவர் அடிக்கடி சென்று பல்வேறு பணிகளை செயல்படுத்துவது வழக்கம்.

 தற்போது தொகுதி முழுவதும் ரூ.1,500 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சித் திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட்டு உள்ளன. இவற்றை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று வாரணாசி சென்றார்.

வாரணாசி நகரில் ‘ருத்ராக்ஷ்’ என்ற பெயரில் ‘சர்வதேச ஒத்துழைப்பு’ பிரமாண்ட மாநாட்டு அரங்கம் மற்றும் தங்கும் விடுதி கட்டப்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டு உதவியுடன் கட்டப்பட்டுள்ள இந்த அரங்கை, பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.

அதேபோல பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் மருத்துவ கல்லூரி சார்பில் 100 படுக்கைகள் கொண்ட மாதிரி பிரசவ ஆஸ்பத்திரி நவீன முறையில் கட்டப்பட்டுள்ளது. அதையும் பிரதமர் திறந்து வைத்தார்.

அத்துடன் சாலை பணிகள், பல அடுக்கு வாகன நிறுத்தம், சுற்றுலா திட்டங்கள் ஆகியவற்றையும் அவர் தொடங்கி வைத்தார். இந்த 3 திட்டங்களுக்கு மட்டும் தனியாக ரூ.744 கோடி செலவிடப்பட்டுள்ளது.

கங்கை ஆற்றில் நவீன படகு மூலம் சுற்றிப்பார்க்கும் புதிய திட்டம், வாரணாசி - காசிபூர் சாலையில் 3 அடுக்கு மேம்பாலம் உள்ளிட்ட திட்டங்களும் தொடங்கப்பட்டன.

மேலும் கிராமப்புற குடிநீர் திட்டங்கள், வீட்டுத்தோட்ட வளர்ப்பு திட்டம் ஆகியவற்றையும் அவர் தொடங்கி வைத்தார். பின்னர் தொகுதியில் நடக்கும் வளர்ச்சிப் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

மேலும் வாரணாசி தொகுதியில் கொரோனா கட்டுப்படுத்துதல் தொடர்பாக மருத்துவ அதிகாரிகளுடன் ஆய்வுகளை மேற்கொண்டார்.

தலைப்புச்செய்திகள்