Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

எல்லையில் அமைதி நிலவினால் மட்டுமே இரு நாடுகளின் நல்லுறவு மேம்படும்: சீனாவிடம் ஜெய்சங்கர் வலியுறுத்தல்

ஜுலை 15, 2021 01:20

புதுடெல்லி: எல்லையில் அமைதி நிலவினால் தான், இரு நாடுகள் இடையே உறவு மேம்படும் என சீன வெளியுறவு அமைச்சரிடம், நமது வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்து உள்ளார்.

தஜிகிஸ்தான் தலைநகர் துஷான்பேயில் ஷாங்காய் கூட்டு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு நடந்தது. இந்த மாநாட்டிற்கு பின் இந்தியா வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ இருவரும் சுமார் ஒரு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதன் பிறகு ஜெய்சஙகர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: சீனாவுடன் மேற்கு பகுதியில் நீடிக்கும் எல்லை பிரச்னை குறித்து அந்நாட்டு அமைச்சர் வாங் யீயுடன் பேச்சுவார்த்தை நடத்தினேன். எல்லை பகுதிகளில் சீனா தன்னிச்சையாக நிலைப்பாட்டை மாற்றி வருவதை இந்தியா ஒரு போதும் ஏற்றுக்கொள்ளாது. எல்லையில், முழுமையான மறுசீரமைப்பும், அமைதியும் நிலவினால் தான் இரு நாடுகளுக்கு இடையே நல்லுறவு மேம்படும். எல்லை பிரச்னைக்கு ராணுவ கமாண்டர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தையை விரைவில் நடத்த இரு நாடுகளும் ஒப்பு கொண்டு உள்ளன. இவ்வாறு அவர் பதிவிட்டு உள்ளார்.

தொடர்ந்து மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், எல்லையில் தொடர்ந்து நிலவும் பிரச்னையால் இரு நாடுகளின் நல்லுறவு பாதிக்கப்படுவது கண்கூடாக தெரிகிறது. இது இரு நாடுகளுக்கும் நல்லதல்ல. இதனால், எல்லையில், ஸ்திரத்தன்மை ஏற்படவும், தன்னிச்சையான நடவடிக்கைகளை எடுப்பதில்லை எனவும் இரு நாடுகளும் ஒப்பு கொண்டன. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

தலைப்புச்செய்திகள்