Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

எல்.முருகனுக்கு அமைச்சர் பதவி அளித்தது பெருமைப்படுத்த அல்ல: எம்.பி திருமாவளவன் கருத்து

ஜுலை 12, 2021 12:45

சென்னை: எல்.முருகனுக்கு அமைச்சர் பதவியை அளித்திருப்பது அவரை பெருமைப்படுத்துவதற்காக அல்ல என எம்.பி திருமாவளவன் தெரிவித்துள்ளார். நாகை பொது அலுவலக சாலையில் உள்ள நாகை எம்எல்ஏ அலுவலகத்தை, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும், எம்.பியுமான திருமாவளவன் நேற்று திறந்துவைத்தார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியது: 

தமிழக பாஜக தலைவராக எல்.முருகன் இருந்தபோது நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில்தான், பாஜக 4 எம்எல்ஏக்களை பெற்றிருக்கிறது. இதற்காக, எல்.முருகனை பாராட்டியிருக்க வேண்டும். அவரை தலைவர் பதவியில் நீடிக்க அனுமதித்திருக்க வேண்டும். ஆனால், அவர் தலைவராக நீடிப்பதை பாஜகவின் தேசிய தலைமையும், தமிழக பாஜகவினரும் விரும்பவில்லை. அவரை வெறுமையாக அப்புறப்படுத்த முடியாது என்பதால், ஒப்புக்கு அமைச்சர் பதவியை தந்திருக்கிறார்கள். அவருக்கு, அமைச்சர் பதவியை தந்திருப்பது, அவரை பெருமைப்படுத்துவதற்காக அல்ல.

எல்.முருகனை தலைவர் பதவியிலிருந்து அகற்றிவிட்டு, குறிப்பிட்ட ஒரு சமூகத்தைச் சார்ந்தவர்களை கவர்வதற்காக, மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரை புதிய தலைவராக நியமித்துள்ளனர். வரும் நாடாளுமன்ற தேர்தலில் மேற்கு மாவட்டங்களை குறிவைத்து பாஜகவினர் காய்நகர்த்தி வருகின்றனர். இதனால்தான், கொங்கு மண்டலத்தை தனி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்ற கருத்தை திட்டமிட்டு பரப்பி வருகின்றனர். எத்தகைய சவால்களையும் எதிர்கொள்ளக்கூடிய திறமையுள்ள முதல்வர், சனாதன சக்திகளின் சதிகளை முறியடிப்பார் என்றார்.

நிகழ்ச்சியில், எம்.பி செல்வராஜ், எம்எல்ஏக்கள் நாகை மாலி, முகம்மது ஷா நவாஸ், முன்னாள் அமைச்சர் மதிவாணன், முன்னாள் எம்எல்ஏக்கள் மாரிமுத்து, எம்.ஜி.கே.நிஜாமுதீன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தலைப்புச்செய்திகள்