Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இவர்கள்தான் எதிர்காலம்: ரணதுங்கா கருத்துக்கு அரவிந்த டி சில்வா பதிலடி

ஜுலை 10, 2021 12:35

இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் ரணதுங்கா கூறுவதுபோல், இலங்கை வந்துள்ள இந்திய அணி 2-ம் தர அணி அல்ல. இவர்கள்தான் எதிர்காலமாக இருக்கப்போகிறார்கள் என்று இலங்கை அணியின் முன்னாள் வீரர் அரவிந்த டி சில்வா தெரிவித்துள்ளார். விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, இங்கிலாந்துக்கு 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடச் சென்றுள்ளது. இதையடுத்து, ஷிகர் தவண் தலைமையில், இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணி இலங்கைக்குப் பயணம் செய்துள்ளது.

இலங்கையுடன் 3 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் ஷிகர் தவண் தலைமையிலான இந்திய அணி விளையாட உள்ளது. இந்த அணியில் ஹர்திக் பாண்டியா, குர்னல் பாண்டியா, சூர்யகுமார் யாதவ், புவனேஷ்வர் குமார், யஜூவேந்திர சஹல், குல்தீப் யாதவ், தேவ்தத் படிக்கல், ருதுராஜ் கெய்க்வாட், சேத்தன் சக்காரியா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்நிலையில் சமீபத்தில் கருத்து தெரிவித்த இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் ரணதுங்கா, இலங்கைக்கு 2-ம் தர இந்திய அணி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று விமர்சித்தார்.

அவர் அளித்த பேட்டியில், “இலங்கைக்கு 2-ம் தர இந்திய அணி பயணம் மேற்கொண்டுள்ளது. 2-ம் தர இந்திய அணி இங்கு வந்துள்ளது இலங்கை கிரிக்கெட் அணிக்கு அவமானத்தைத் தவிர வேறு என்ன இருக்க முடியும்? சீனியர் அணியை இங்கிலாந்துக்கு அனுப்பிவிட்டு 2-ம் தர அணியை இலங்கைக்கு அனுப்பிவிட்டார்கள்” எனத் தெரிவித்தார்.

இந்நிலையில் ரணதுங்காவின் கருத்தை இலங்கை கிரிக்கெட் வாரியம் மறுத்தது. பல முன்னாள் வீரர்களும் கண்டித்தனர். இதற்கிடையே இலங்கை அணியின் முன்னாள் வீரர் அரவிந்த டி சில்வா அளித்த பேட்டியில் கூறியதாவது:

''இலங்கை வந்துள்ள இந்திய அணியை 2-ம் தர அணி என்று கூற முடியாது. இலங்கை கிரிக்கெட் அணியை அவமானப்படுத்தவும் இல்லை. இந்திய அணியிடம் ஏராளமான திறமை பொதிந்து கிடக்கிறது. ஆதலால், இந்திய அணியை 2-ம் தர அணி என்று அழைக்கும் பேச்சுக்கே இடமில்லை.

தற்போதுள்ள சூழலில் வீரர்கள் விளையாடும் விதத்தை உலக அளவில் பார்த்தால், வீரர்களை ஒரே மாதிரியாகப் பயன்படுத்தாமல், சுழற்சி முறையில் அணியில் விளையாட வைக்கிறார்கள். ஏனென்றால், இளம் வீரர்களை பயோ-பபுளில் வைப்பது சவாலானது. எளிதானது அல்ல.

அவர்களின் மனநிலையை உற்சாகமாக வைத்திருக்க வேண்டியது முக்கியமானது. ஆதலால், சுழற்சி முறையில் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இந்த முறை எதிர்காலத்தில் அனைத்து அணிகளாலும் பின்பற்றப்படலாம். நீங்கள் 2-ம் தர அணியோ அல்லது 3-ம் தர அணியோ அனுப்பினாலும் அது சுழற்சி முறையாகத்தான் இருக்குமே தவிர தர அடிப்படையில் இருக்காது.

வீரர்களை அணியில் மாற்றுவதற்கு யாரையும் குறை சொல்ல முடியாது. பல்வேறு நாடுகளின் தொடருக்கு வேறுபட்ட வீரர்களைத் தேர்வு செய்ய வேண்டும். என்னைப் பொறுத்தவரை இந்த அணிதான் எதிர்காலமாகக் கூட இருக்கலாம். இந்திய அணியில் உள்ள 20 வீரர்களில் 14 வீரர்கள் இந்திய அணிக்காகப் பல்வேறு பிரிவுகளில், போட்டிகளில் விளையாடிய அனுபவம் உள்ளவர்கள். ஆதலால், இவர்களை 2-ம் தர அணி என அழைக்க முடியாது.

இலங்கை அணியிலும் பல மாற்றங்களைச் செய்ய வேண்டும். அனைத்துப் பிரிவுகளிலும் சமநிலையுடன் இருக்கும் வீரர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இங்கிலாந்து பயணம், இலங்கை அணி உண்மையில் எந்த இடத்தில் இருக்கிறது என்பதை உணர்த்திவிட்டது. இது நிச்சயமாக இளம் அணி இல்லை, அனுபவம் வாய்ந்த அணிதான். அணியில் சரிவிகிதக் கலப்பில் வீரர்களைக் கொண்டுவந்தால்தான் சிறந்த அணியாக மாறும்''.

இவ்வாறு அரவிந்த டி சில்வா தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்