Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தனிநபர் பாதுகாப்பு கொள்கை நிறுத்தம்: டெல்லி நீதிமன்றத்தில் வாட்ஸ் அப் உறுதி

ஜுலை 10, 2021 12:31

புதுடெல்லி: தங்கள் நிறுவனம் அமல்படுத்துவதாக இருந்த தனிநபர் பாதுகாப்புக் கொள்கையை நிறுத்தி வைப்பதாக வாட்ஸ் அப் நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. மத்திய அரசு சமீபத்தில் கொண்டு வந்துள்ள தகவல் பாதுகாப்பு மசோதா அமலுக்கு வரும் வரையில் இதை நிறுத்தி வைப்பதாக தெரிவித்துள்ளது.

ஒரு வேளை அந்த மசோதாவில் நிறுவனங்கள் தனி நபர் பாதுகாப்பு கொள்கையை வகுக்க வழி செய்யப்பட்டிருந்தால் அப்போது அதை செயல்படுத்துவோம் என்று வாட்ஸ் அப் நிறுவனம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே தெரிவித்தார். வாட்ஸ்அப் நிறுவனத்தின் தனிநபர் பாதுகாப்பு கொள்கையானது தகவல் தொழில்நுட்ப பாதுகாப்பு விதிகளுக்கு எதிரானது என மத்திய அரசு தெரிவித்ததாக ஹரீஷ் சால்வே தெரிவித்திருந்தார்.

முன்னதாக இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் மத்திய அரசு குறிப்பிடுகையில் வாட்ஸ் அப் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மார்க் ஜூகர்பெர்கருக்கு கடிதம் மூலம் விளக்கம் கேட்டிருப்பதாகவும், அவரிடமிருந்து பதிலை எதிர்நோக்கியிருப்பதாகவும் தெரிவித்திருந்தது.

தொடக்கத்தில் தங்கள் நிறுவன கொள்கையை ஏற்காதவர்களுக்கு இந்த சேவை நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதனால் பலரும் ``டெலிகிராம்'', ``சிக்னல்'' போன்றவற்றுக்கு மாறினர். இந்நிலையில் இந்த கொள்கையை அமல்படுத்தாமல் நிறுத்தி வைப்பதாக வாட்ஸ் அப் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தலைப்புச்செய்திகள்