Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ட்விட்டர் நிறுவனம் விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்: தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கருத்து

ஜுலை 09, 2021 12:57

புதுடெல்லி: நாட்டின் சட்ட விதிகள்தான் முதன்மை யானது. அதை ட்விட்டர் நிறுவனம் கட்டாயம் பின்பற்றியாக வேண்டும் என்று நேற்று முன்தினம் மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்ட அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

புதிய தகவல் தொழில்நுட்ப விதி தொடர்பாக அரசுக்கும் ட்விட்டர் நிறுவனத்துக்கும் இடையே பனிப்போர் நிலவி வருகிறது. புதிய தகவல் தொழில் நுட்ப விதியின்படி ட்விட்டரில் கருத்து தெரிவிப்போர் விவரம் வெளியிடப்பட வேண்டும் என்பதும் அரசு கொண்டு வந்துள்ள தகவல் தொழில்நுட்ப விதிகளில் ஒன்றாகும். இதனால் தனது பயனர்களின் தகவலை அரசு கண் காணிக்க முடியும். இது தனி நபர் சுதந் திரத்துக்கு எதிரானது என ட்விட்டர் நிறுவனம் கூறிவருவதோடு விதிமுறைகளை பின்பற்றாமல் இருந்து வருகிறது.

இந்நிலையில் இந்திய மண்ணின் உயரிய தன்மை சட்டத்துக்குத்தான் உள்ளது. அதை ட்விட்டர் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருப் பது ட்விட்டர் நிறுவனத்துக்கு விடப் பட்டிருக்கும் மறைமுக எச்சரிக்கை யாகவே பார்க்கப்படுகிறது.

அரசின் புதிய விதிமுறைகளை செயல்படுத்த எட்டு வார கால அவகாசம் (2 மாதம்) அளிக்க வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றத்தில் ட்விட்டர் நிறுவனம் கோரியுள்ளது. வெளிநாட்டு நிறுவனங்களில் இந்திய பிரஜை ஒருவர் குறை கேட்பு அதிகாரியாக நியமிக்கப்பட வேண்டும் என்பது ஐடி விதிமுறைகளில் ஒன்றாகும். இதன்படி புதிய அதிகாரியை நியமிக்க இரண்டு மாத கால அவகாசம் அளிக்க வேண்டும் என ட்விட்டர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இரண்டு நாள்களுக்கு முன்பாக ட்விட்டர் நிறுவனம் தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்றம் அந்நிறுவனத்தை கடுமையாக சாடியது. விதிமுறைகளை பின்பற்றாதது தொடர்பாக கடுமையான கண்டனம் தெரிவித்திருந்தது. இந்த நாட்டில் செயல்பாடுகளைத் தொடரும் வரையில் விதிமுறைகளை அமல்படுத்தாமல் இருக்கலாம் என ட்விட்டர் நிறுவனம் கருதினால் அதைத் தான் அனுமதிக்க முடியாது என நீதிபதி ரேகா பள்ளி குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு முன்பு குறை தீர்ப்பு அதிகாரியாக தர்மேந்திர சாத்துர் என்பவரை நியமித்திருந்தது. ஆனால் ஓரிரு நாளிலேயே அவர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார். நிறுவனத்தின் சட்ட விதிமீறல் காரண மாக தனக்கு அதிக அழுத்தம் ஏற் படுவதாகக் கூறி அவர் வெளியேறினார். இந்த விவகாரம் தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பல கட்டங்களில் ட்விட்டர் நிறுவனம் தொடர்பாக தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார். வேண்டு மென்றே விதிகளை பின்பற்ற ட்விட்டர் மறுப்பதாக அவர் கடுமையாக விமர் சித்தது குறிப்பிடத்தக்கது.

தலைப்புச்செய்திகள்