Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

முன்னாள் மத்திய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலம் மனைவி டெல்லி வீட்டில் கொலை

ஜுலை 07, 2021 02:05

புதுடெல்லி: தமிழக அரசியல் பாரம்பரிய குடும்பத்தை சேர்ந்தவரும் முன்னாள் மத்திய மந்திரியுமான ரங்கராஜன் குமாரமங்கலத்தின் மனைவி கிட்டி குமாரமங்கலம் (வயது 68) டெல்லியில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்தார். வக்கீலுக்கு படித்துள்ள இவர் சுப்ரீம் கோர்ட்டில் வக்கீலாக பணியாற்றினார்.அவருடைய  வீடு டெல்லியில் வசந்த விஹாரில் உள்ளது.

ரங்கராஜன் குமாரமங்கலம் கிட்டி தம்பதிக்கு மோகன் குமாரமங்கலம் என்ற மகனும், ருஜிரா குமாரமங்கலம் என்ற மகளும் உள்ளனர். இதில் மோகன் குமாரமங்கலம் பெங்களூரில் வசித்து வருகிறார். மகளுக்கு திருமணமாகி கணவர் வீட்டில் வசித்து வருகிறார்.

கிட்டி குமாரமங்கலம் வீட்டில் மஞ்சு என்ற பெண் வீட்டு வேலைகளை கவனித்து வந்தார். அவர் இரவில் கிட்டி குமாரமங்கலத்துடன் வீட்டிலேயே தங்கிக் கொள்வது வழக்கம்.

அதேபோல நேற்று இரவு இருவரும் வீட்டில் இருந்தனர். கிட்டி குமாரமங்கலத்தின் வீட்டில் சலவை பணிகளை செய்வதற்காக அருகில் உள்ள பன்வர்சிங் முகாமை சேர்ந்த ராஜூலக்கான் (24) என்பவர் நியமிக்கப்பட்டு இருந்தார். அவர் துணிகளை சலவை செய்வதற்காக அவ்வப்போது வீட்டுக்கு வந்து செல்வார். நேற்று இரவு 9 மணிக்கு அவர் வீட்டுக்கு வந்தார்.

அப்போது வேலைக்கார பெண் மஞ்சு கதவை திறந்து ‘‘ஏன் இந்த நேரத்தில் வருகிறாய்?’’ என்று கேட்டார். அப்போது ராஜூலக்கான், மஞ்சுவை வலுக்கட்டாயமாக அங்கிருந்து தள்ளி அருகில் உள்ள அறைக்குள் இழுத்து சென்றார்.

இந்த நேரத்தில் 2 வாலிபர்கள் வீட்டுக்குள் வந்தனர். அவர்கள் 3 பேரும் சேர்ந்து மஞ்சுவை கடுமையாக தாக்கி இரு கைகளையும் கட்டி அறைக்குள் பூட்டினார்கள்.

அந்த நேரத்தில் மற்றொரு அறையில் இருந்த கிட்டி குமாரமங்கலம் சத்தம் கேட்டு வெளியே வந்தார். அவரையும் மற்றொரு அறைக்குள் இழுத்துச் சென்றனர். அப்போது அவர் கூச்சல் போட்டார். உடனே 3 பேரும் தலையணையால் முகத்தை அமுக்கினார்கள். இதில் மூச்சுத்திணறி அந்த இடத்திலேயே அவர் உயிரிழந்தார். பின்னர் 3 பேரும் அங்கிருந்த பெட்டியை திறந்து நகை, பணங்களை எடுத்துச் சென்றனர்.

வீட்டு அறைக்குள் அடைபட்டு கிடந்த மஞ்சு தொடர்ந்து கூச்சலிட்டபடியே இருந்தார். இந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்தனர். அவர்களிடம் நடந்த விஷயத்தை கூறினார். இரவு 11 மணியளவில் அவர்கள் போலீசுக்கு தகவல் அளித்தனர்.

உடனே போலீசார் அங்கு விரைந்து சென்றனர். கிட்டி குமாரமங்கலத்தின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். வேலைக்கார பெண் மஞ்சு கொடுத்த தகவலையடுத்து இரவிலேயே கொலையாளி ராஜூலக்கானை போலீசார் கைது செய்தனர். அவனுடன் வந்த மற்ற 2 பேருடைய விவரங்களும் தெரியவந்தது. ஆனால் அவர்கள் தலைமறைவாகி விட்டார்கள். எனவே அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

அவர்கள் 2 பேரும் 18 வயதுக்கும் குறைவானவர்கள். எனவே அவர்கள் சிறுவர்களாக கருதப்படுகிறார்கள். இதனால் சட்டவிதிகளின்படி அவர்களுடைய பெயர் விவரங்களை போலீசார் வெளியிடவில்லை. தலைமறைவான 2 பேரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று போலீஸ் இணை கமிஷனர் இன்கித் பிரதாப்சிங் தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்