Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தனியார் பேருந்து சேவை ஜூலை 1 முதல் தொடக்கம்: டீசல் விலையை குறைக்க கோரிக்கை

ஜுன் 29, 2021 11:34

சென்னை:தமிழகத்தில் 50 சதவீத பயணிகளுடன் பேருந்துகளை இயக்கினால் வருவாய் இழப்பு ஏற்படும். எனவே, டீசல் விலையை அரசு குறைக்க வேண்டும் என்று தமிழ்நாடு தனியார் பேருந்து உரிமையாளர்கள் சம்மேளனம் வேண்டுகோள் விடுத்துள்ளது. தமிழகத்தில் சென்னை, நாகர்கோவில், ஊட்டியை தவிர, மற்றஇடங்களில் மொத்தம் 4,700 தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவற்றில் 1,500 பேருந்துகள் நகரப் பேருந்துகள் ஆகும்.

இந்நிலையில், கரோனா ஊரடங்கில் கூடுதல் தளர்வாக,27 மாவட்டங்களில் பேருந்துகளை இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அரசு பேருந்து போக்குவரத்து நேற்று தொடங்கிய நிலையில், தனியார் பேருந்துகளை வரும் 1-ம் தேதி முதல் இயக்க அதன் உரிமையாளர்கள் தயாராகி வருகின்றனர். இதுகுறித்து தமிழ்நாடு தனியார் பேருந்து உரிமையாளர்கள் சம்மேளன செயலாளர் தர்மராஜ் நேற்று கூறியதாவது:

அரசு விதிமுறைகளை பின்பற்றி ஜூலை 1-ம் தேதி முதல் பேருந்துகளை இயக்குவதற்கான பணியில் ஈடுபட்டுள்ளோம். ஒருசிலநகரங்களில் இன்றே தனியார் பேருந்துகள் இயக்கம் தொடங்கிஉள்ளது. இருப்பினும், பயணிகள் கூட்டம் பெரிய அளவில் இல்லை. அதேநேரம், 50 சதவீத இருக்கைகளில் மட்டுமே பயணிகளைஏற்றிச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. தவிர, டீசல் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருவதால், எங்களுக்கு அதிக அளவில் வருவாய் இழப்பு ஏற்படும். எனவே, வரி குறைப்பு போன்ற நடவடிக்கைகள் மூலம் டீசல் விலையை குறைக்க தமிழக அரசு முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.
 

தலைப்புச்செய்திகள்