Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அனைத்து வழிபாட்டுத் தலங்களும் இன்று திறப்பு: கரோனா விதிமுறைகளுடன் பாதுகாப்பு ஏற்பாடுகள்

ஜுன் 28, 2021 01:02

சென்னை: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் அனைத்து வழிபாட்டுத் தலங்களும் இன்று திறக்கப்படுகின்றன. இதையொட்டி, கரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் கரோனா 2-வது அலையின் தாக்கம் அதிகரித்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு அனைத்து மத வழிபாட்டுத் தலங்களும் மூடப்பட்டன. தற்போது, நோய் பரவல் குறைந்து வருவதால், வழிபாட்டுத் தலங்களை திறக்குமாறு பக்தர்கள் தொடர்ந்து கோரி வந்தனர்.

இந்த சூழலில், தமிழகம் முழுவதும் பல்வேறு தளர்வுகளுடன் வரும் ஜூலை 5-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தொற்று பரவல் வெகுவாக குறைந்துள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் மட்டும் வழிபாட்டுத் தலங்களை திறக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து, இந்த 4 மாவட்டங்களிலும் கோயில், தர்கா, தேவாலயம் உள்ளிட்ட அனைத்து மத வழிபாட்டுத் தலங்களும் இன்று திறக்கப்படுகின்றன.

இதையொட்டி, சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயில் உள்ளிட்ட கோயில்கள் முழுவதும் கழுவி சுத்தம் செய்யப்பட்டது. பக்தர்கள் சமூக இடைவெளியுடன் வரிசையில் வருவதற்கு வசதியாக, வட்டங்கள் வரையப்பட்டு, கட்டைகள் கட்டும் பணிகள் நேற்று நடைபெற்றன. திருவேற்காடு கருமாரியம்மன் கோயில் உட்பட 4 மாவட்டங்களின் பல்வேறு கோயில்களிலும் நேற்று சிறப்பு முகாம் நடத்தப்பட்டு, கோயில் பணியாளர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. மசூதி, தேவாலயம் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதுபற்றி இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

கோயில்களில் 28-ம் தேதி (இன்று) காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். பக்தர்கள் கட்டாயம் முகக் கவசம் அணிந்து வர வேண்டும். அவர்களது உடல் வெப்ப அளவு பரிசோதிக்கப்பட்டு, தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். கோயில்களில் அர்ச்சனை செய்ய அனுமதி இல்லை. தரிசனம் முடித்ததும் பக்தர்கள் வெளியேறும் வகையில் கட்டைகள் கட்டப்பட்டுள்ளன. விபூதி, குங்குமத்தை பொட்டலங்களில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றனர்.
 

தலைப்புச்செய்திகள்