Thursday, 23rd May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வட்டியாக மட்டும் ரூ.13 ஆயிரம் கோடி செலுத்தப்படுகிறது; தமிழக மின்துறைக்கு ரூ.1.58 லட்சம் கோடி கடன்: அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்

ஜுன் 23, 2021 11:22

சென்னை: மின்துறைக்கு ரூ.1.58 லட்சம் கோடி கடன் உள்ளது. வட்டியாக மட்டும் ரூ.13 ஆயிரம் கோடி செலுத்தப்பட்டு வருகிறது என்று அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் நேற்று நடந்த விவாதம்:

சு.ரவி (அதிமுக): கரோனா காலத்தில் கடந்த முறை மின்கட்டணம் செலுத்த அவகாசம் வழங்கப்பட்டது. இம்முறை கட்டணம் செலுத்த மக்கள் கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.

அமைச்சர் செந்தில்பாலாஜி: கரோனா தொற்று அதிகம் இருந்தபோது 2 முறை அவகாசம் அளிக்கப்பட்டது. தற்போது குறைந்துள்ளதால் கட்டணம் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிலும், கட்டணக் குழப்பம் இருப்பதாக நுகர்வோர் தெரிவித்ததால், அவர்களுக்கு 3 வாய்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளன. அதில் ஒரு முறையில் அவர்கள் கட்டணம் செலுத்தலாம். இதுவரை 11.40 லட்சம் பேர் கட்டணம் செலுத்தியுள்ளனர். கடந்த 2016-21 காலகட்டத்திலும் 5.41லட்சம் தடவை மின்கம்ப பிரச்சினையாலும், 10,282 தடவை மின்மாற்றிகளாலும் மின்தடை ஏற்பட்டுள்ளது. கடந்த9 மாதங்களாக பராமரிப்பு பணிநடக்கவில்லை. பாதிப்புகளை 10 நாட்களில் சீரமைக்க உத்தரவிடப்பட்டு பணிகள் நடப்பதால் மின்தடை ஏற்படுகிறது. மின்துறைக்கு ரூ.1.58 லட்சம் கோடி கடன் உள்ளது. வட்டியாக மட்டும் ரூ.13 ஆயிரம் கோடி செலுத்தப்பட்டுள்ளது. வட்டியை குறைக்க வங்கிகளுடன் பேசி வருகிறோம். இதன்மூலம் ரூ.2 ஆயிரம் கோடி வட்டித்தொகை குறையும்.

எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம்: 9 மாதங்களாக பராமரிப்பு பணி நடக்கவில்லை என்கிறீர்கள். அப்போது மின்தடை, மின்வெட்டு இல்லையே.

செந்தில்பாலாஜி: டிசம்பர், ஜனவரியில் மின்தடை இருந்தது. மின்மிகைமாநிலம் என்று கூறும் நீங்கள், காத்திருக்கும் 2.42 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்காதது ஏன்?தவிர, தமிழக மின்சாரத்தில் மூன்றில்ஒரு பகுதிதான் இங்கு உற்பத்தி செய்யப்படுகிறது. மற்றவை வெளியில் வாங்கப்படுகிறது.

பி.தங்கமணி (அதிமுக): மின்மிகைமாநிலம் என்பது சொந்த உற்பத்தியைக் கொண்டு அளவிடப்படுவது இல்லை. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2016-ல் மின்மிகை மாநிலமாக அறிவித்தபோது எங்களுடன் இருந்த அமைச்சர் செந்தில்பாலாஜி, பேரவையில் மேஜையை தட்டி வரவேற்றார். சென்னையில் புதைவட மின்பாதை இருக்கும்போது ஏன் மின்தடை ஏற்படுகிறது?

செந்தில்பாலாஜி: சென்னையில் பில்லர் பாக்ஸ்களை பராமரிக்கும் பணி நடக்கிறது. நீண்டகால ஒப்பந்தத்தில் தனியாரிடம் ரூ.3 முதல் 3.50-க்குமின்சாரம் கிடைக்கும்போது, நீங்கள்ஒரு யூனிட்டை ரூ.7-க்கு வாங்கியுள்ளீர்கள். ஒப்பந்தப்படி, அவர்கள் மின்சாரம் தந்தாலும், தராவிட்டாலும் ஆண்டுக்கு ரூ.4,300 கோடி செலுத்த வேண்டி உள்ளது. இதனால்தான் கடந்த கால தவறுகளை திருத்துவது குறித்து ஆளுநர் உரையில் கூறப்பட்டது. இவ்வாறு விவாதம் நடந்தது.

தலைப்புச்செய்திகள்