Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஆளுநரின் அறிவிப்புக்கு டெல்டா விவசாயிகள் வரவேற்பு

ஜுன் 22, 2021 11:47

சென்னை: விவசாயத்துக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என பேரவையில் தமிழக ஆளுநர் அறிவிப்பு வெளியிட்டுள்ளதை விவசாயிகள் வரவேற்றுள்ளனர். இதுகுறித்து அவர்கள் தெரிவித்துள்ளதாவது:

தமிழ்நாடு விவசாயிகள் சங்கமாநிலச் செயலாளர் சாமி நடராஜன்: ஆண்டுதோறும் வேளாண்மைக்கு தனி நிதிநிலை அறிக்கை வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், தமிழக அரசின் தற்போதைய அறிவிப்பு மகிழ்ச்சியளிக்கிறது. அதேபோல, தமிழகம் முழுவதும் உழவர் சந்தைகள் சீரமைக்கப்படும் என்பதையும் வரவேற்கிறோம். அதேபோல, திமுக தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளபடி, விவசாயிகளின் வளர்ச்சிக்கு மாநில அளவில் ஆலோசனை குழுவை ஏற்படுத்த வேண்டும்.

காவிரி விவசாயிகள் சங்கதஞ்சாவூர் மாவட்டச் செயலாளர்சுந்தர விமல்நாதன்: இந்தியாவில் விவசாயத்தை அதிகம் மேற்கொள்ளக்கூடிய பஞ்சாப், ஹரியாணா, சத்தீஸ்கர், மேற்கு வங்கம், கேரளா, ஆந்திரா, தெலங்கானா போன்ற மாநிலங்களில் கூட விவசாயத்துக்கு என தனி நிதிநிலை அறிக்கை இதுவரை தாக்கல் செய்யவில்லை. கடந்த 30 ஆண்டு காலமாக தமிழக விவசாயிகள் விடுத்த கோரிக்கைக்கு தற்போதுதான் தீர்வு கிடைத்து உள்ளது.

விவசாயத்துக்கு தனி நிதிநிலை அறிக்கையை வரவேற்பதுடன், முதல்வரையும் பாராட்டுகிறோம். இந்த நிதிநிலை அறிக்கை தயாரிக்கும் முன்பாக, மாவட்டந்தோறும் விவசாயிகளை சந்தித்து, அவர்களின் ஆலோசனைகளை பெற்று நிதிநிலை அறிக்கை தயாரிக்க வேண்டும். அப்போதுதான் விவசாயிகளுக்கான இந்த தனி நிதிநிலை அறிக்கை என்பது முழுமைபெறும்.

காவிரி டெல்டா விவசாயிகள் நலச் சங்க மாவட்ட துணைச் செயலாளர் கவண்டம்பட்டி சுப்பிரமணியன், தமிழக ஏரி மற்றும் ஆற்றுபாசன விவசாயிகள் சங்க தலைவர்பூ.விசுவநாதன்: திமுக தேர்தல் அறிக்கையில் கூறியபடி வேளாண்மைக்கு தனி பட்ஜெட் என அறிவித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. வேளாண்மைக்கு பட்ஜெட் தயாரிக்கும்போது விவசாயிகளிடம் அரசு கருத்து கேட்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
 

தலைப்புச்செய்திகள்