Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்

ஜுன் 21, 2021 09:55

சென்னை: தமிழகத்தில் சமீபத்தில் சட்டசபை தேர்தல் நடந்து புதிய ஆட்சி அமைந்தது. அதைத்தொடர்ந்து 15-வது சட்டசபை நிறைவடைந்து 16-வது சட்டசபை அமைந்துள்ளது. 16-வது சட்டசபையின் முதல் கூட்டத்தொடர், கவர்னர் உரையுடன் 21-ந்தேதி தொடங்குவதாக சபாநாயகர் அப்பாவு கடந்த 9-ம் தேதி அறிவித்தார். இந்நிலையில், தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் கலைவாணர் அரங்கத்தில் இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது.

முன்னதாக, கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சபாநாயகர் அப்பாவு, சட்டசபை செயலாளர் சீனிவாசன் ஆகியோர் சட்டசபை மரபுப்படி சட்டசபைக்குள் அழைத்து வருவார்கள்.
காலை 10 மணிக்கு கவர்னர் தனது உரையை ஆங்கிலத்தில் நிகழ்த்துவார். தொடர்ந்து, கவர்னர் ஆங்கிலத்தில் நிகழ்த்திய உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு வாசிப்பார். அதோடு அவை நிகழ்ச்சிகள் முடிவடையும்.

அதன்பின், சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூடும். அதில், சட்டசபை கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்த வேண்டும்? என்பது பற்றி முடிவு செய்யப்படும்.

சட்டசபைக்கு வரும் அனைத்து எம்.எல்.ஏ.க்கள், அலுவலர்கள், ஊழியர்கள் அனைவருமே கொரோனா பரிசோதனை செய்த பிறகுதான் அனுமதிக்கப்படுவார்கள் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சட்டசபையில் இருக்கைகள், சமூக இடைவெளியுடன் போடப்பட்டுள்ளன. அதோடு கொரோனா பரவல் தடுப்பு ஏற்பாடுகள் அனைத்தும் சட்டசபையில் கடைப்பிடிக்கப்படும்.

தலைப்புச்செய்திகள்