Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பிரதமரை சந்திக்கும்போது அகில இந்திய அளவில் நீட் தேர்வை ரத்து செய்ய அழுத்தம் தர வேண்டும்: முதல்வர் ஸ்டாலினுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் வேண்டுகோள்

ஜுன் 17, 2021 12:01

சென்னை: பிரதமரை நேரில் சந்திக்கும் போது அகில இந்திய அளவில் நீட் தேர்வை ரத்து செய்ய அழுத்தம் தர வேண்டும் என்று முதல்வர்மு.க.ஸ்டாலினுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

‘நீட் தேர்வை ரத்து செய்ய முதல் கட்டப்பேரவைக் கூட்டத்தொடரிலேயே சட்டம் இயற்றப்படும்’ என்று தேர்தல் வாக்குறுதி அளித்துவிட்டு, ஆட்சிக்கு வந்து ஒரு மாதம் கழித்து அதற்கு ஒரு குழுவை நியமித்து, அந்த குழு அறிக்கை அளிக்க ஒரு மாதம் அவகாசம் அளித்திருப்பது துரிதமான நடவடிக்கை அல்ல; மாறாக காலந்தாழ்த்தும் செயலாகும்.

கடந்த 2011-ம் ஆண்டு நுழைவுத்தேர்வுக்கு மத்திய அரசு அடித்தளம் இட்டபோதே, அதை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உறுதியுடன் எதிர்த்தார். கிராமப்புறம், மிகவும் பின்தங்கிய சமூக பொருளாதார பின்னணியைக் கொண்ட மாணவர்கள், நகர்ப்புற மாணவர்களுடன் இணைந்து‘நீட்’ உட்பட பொது நுழைவுத்தேர்வை எதிர்கொள்ள முடியாதது; நீட் பயிற்சி மையங்கள் கிராமங்களில் இல்லாதது, பண வசதியின்மை; பாடத்திட்டம் சமமாக இல்லாதது; இட ஒதுக்கீட்டில் நீட் தேர்வு குழப்பத்தை விளைவிப்பது ஆகியவை அவர் எதிர்த்ததற்கு காரணமாகும்.

இந்த சூழலில் நீட் தேர்வை ரத்து செய்ய சட்டப்பேரவையில் தீர்மானம் இயற்றி, குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெறுவது தான். இதன் அடிப்படையில் தான் கடந்த 2017- பிப்ரவரி 1-ம் தேதி தமிழ்நாடு மருத்துவம் மற்றும் பல் மருத்துவ இளநிலை, முதுநிலை படிப்புகளுக்கான சட்ட முன்வடிவுகள் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

நீட் தேர்வால் கிராமப்புற, நகர்ப்புற ஏழை, அரசுப்பள்ளிபயிலும், தமிழ்வழிக்கல்வி பயிலும் மாணவர்களுக்கு சில ஆண்டுகளாக அரசு மருத்துவக்கல்வி பயிலும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதாக முதல்வரே அறிவித்துவிட்டு, நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய குழு அமைப்பது என்பது அவருடைய அறிவிப்பிலேயே அவருக்கு சந்தேகம் இருக்கிறதோ என்ற எண்ணம் மாணவர்கள் மத்தியில் நிலவுகிறது. ‘நீட்’ ரத்துக்கு குழு எதற்கு. தேர்தல் அறிக்கையில் தெரிவித்ததற்கிணங்க முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரிலேயே நீட் தேர்வு ரத்து குறித்த சட்டத்தை நிறைவேற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுமட்டுமின்றி பிரதமரை நேரில் சந்திக்கும் போது இதுகுறித்து விரிவாக எடுத்துரைத்து நீட் தேர்வை அகில இந்திய அளவில் ரத்து செய்ய அழுத்தம் அளிக்கும்படியும் முதல்வரை கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

தலைப்புச்செய்திகள்