Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஆன்லைன் விளையாட்டில் சிறுவர்- சிறுமியரிடம் ஆபாச பேச்சு: யூ-டியூபர் மதனின் வீடியோக்களை முடக்க நடவடிக்கை

ஜுன் 15, 2021 12:55

சிறுவர்-சிறுமியரிடம் ஆபாச பேச்சு தொடர்பாக யூ-டியூபர் மதனின் வீடியோக்களை முடக்க போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்தியாவில் தடை செய்யப்பட்ட பப்ஜி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டு விளை யாடும்போது, அதை எவ்வாறு வெற்றி கொள்வது என்பது குறித்து லைவ்வாக விளை யாடிக்கொண்டே ஆலோசனை கூறியவாறு, ஆபாச வார்த்தைகளைப் பயன்படுத்தி மதன் என்ற இளைஞர் பேசும் ஆபாச வீடியோக்கள் அண்மையில் வைரலாகின.

சிறுவர், சிறுமிகளிடம் அவர் மிகவும் ஆபாசமாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர் பேசும் வீடியோக்கள் யூ-டியூப் சேனலில் பதிவேற்றம் செய்யப்பட்டு வந்ததாகவும், குற்றம் சாட்டப்பட்டது. மேலும், அவர் பணம் பறித்தாகவும் கூறப்படுகிறது. இது மட்டுமின்றி, மதன் நடத்தி வரும் இரு யூ-டியூப் தளங்களில் ஆபாச உரையாடல் வீடியோக்கள் அதிக அளவில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், அதை லட்சக்கணக்கானோர் பின்தொடர் வதாகவும் கூறப்படுகிறது.

ஊரடங்கு காரணமாகவும், தற்போது ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடப்பதாலும் பல மாணவ, மாணவிகள், சிறுவர், சிறுமிகள் ஆகியோர் வீடியோ கேமில் அதிக அளவில் நாட்டம் கொண்டுள்ள நிலையில், இதுபோன்ற நபர்களின் வீடியோக்களைப் பின் தொடர்வதால், அவர்களின் எதிர்காலம் வீணாகும் என்ற அச்சம் சமூக ஆர்வலர்கள் பலருக்கு ஏற்பட்டது. இதையடுத்து, எல்லை மீறி செயல்படும் மதன் குறித்து சென்னை காவல் ஆணையரிடம் சிலர் புகார் அளித்துள்ளனர். "சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து, சம்பந்தப்பட்ட மதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விவகாரத்தை சைபர் க்ரைம் போலீஸார் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்" என்று காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேற்று முன்தினம் தெரிவித்தார்.

இதுகுறித்து விசாரணை நடத்துவதற்காக, நேரில் ஆஜராகுமாறு புளியந்தோப்பு சைபர் க்ரைம் போலீஸார் மதனுக்கு அறிவுறுத்தியிருந்தனர். ஆனால், அவர் நேற்று நேரில் ஆஜராகவில்லை. எனவே, அவர் தலைமறைவானதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவரது யூ-டியூப் சேனலை முடக்கும் நடவடிக்கையிலும் போலீஸார் இறங்கியுள்ளனர். அவர் மீது எந்த வகையான நடவடிக்கை மேற்கொள்ளலாம் என சைபர் க்ரைம் போலீஸ் அதிகாரிகள் நேற்று ஆலோசனை நடத்தினர்.

தலைப்புச்செய்திகள்