Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஊரடங்கில் புதிய தளர்வுகள் : மாவட்டத்தில் சலூன் கடைகள் திறப்பு

ஜுன் 15, 2021 11:47

தர்மபுரி: தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு சற்று குறைந்த தர்மபுரி உள்ளிட்ட 27 மாவட்டங்களில் ஏற்கனவே ஊரடங்கில் அமல்படுத்தப்பட்ட தளர்வுகளுடன் கூடுதலாக பல்வேறு தளர்வுகள் நேற்று அமலுக்கு வந்தன. இதன்படி தர்மபுரி மாவட்டத்தில் நேற்று காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை குளிர்சாதன வசதி பயன்படுத்தாமல் சலூன் கடைகள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டது.

தர்மபுரி மாவட்டத்தில் மொத்தம் 2,780 சலூன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 4 ஆயிரம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். நேற்று மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான சலூன் கடைகள் திறக்கப்பட்டன. இதனால் சவரத்தொழிலாளர்கள் மற்றும் முடிவெட்டிக் கொள்ள மாதக்கணக்கில் காத்திருந்த வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கடந்த சில வாரங்களாக சலூன் கடைகள் மூடப்பட்டு இருந்ததால் நேற்று காலையிலேயே முடிவெட்டி கொள்ளவும், சவரம் செய்து கொள்ளவும் ஏராளமானோர் சலூன் கடைகளில் திரண்டனர். இதனால் கடைகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்க அரசு அறிவித்துள்ள விதிமுறைப்படி 50 சதவீத தொழிலாளர்களுடன் சலூன் கடைகள் செயல்பட்டன.

கடைகளுக்கு வந்தவர்களுக்கு வரிசைப்படி குறிப்பிட்ட நேரம் ஒதுக்கப்பட்டு முடிவெட்டும் பணி மேற்கொள்ளப்பட்டது. பலர் கடைகள் முன்பு சமூக இடைவெளியுடன் காத்திருந்து முடி வெட்டிக் கொண்டனர். இதேபோல் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான டீக்கடைகள் நேற்று காலை 6 மணிக்கு திறக்கப்பட்டன. டீக்கடைகளில் பார்சல் மட்டும் வழங்கப்பட்டது. அங்கு டீக்குடிக்க அனுமதிக்கப்படவில்லை. மாலை 5 மணி வரை இந்த கடைகள் செயல்பட்டன.

இதேபோல் பள்ளி, கல்லூரிகளில் நிர்வாக பணிகள் நேற்று குறைந்த அளவிலான பணியாளர்களுடன் மேற்கொள்ளப்பட்டன. அனுமதி வழங்கப்பட்ட தொழிற்சாலைகளில் 33 சதவீதம் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டனர்.
 

தலைப்புச்செய்திகள்