Friday, 10th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மதுரை கலெக்டர் இடமாற்றம் மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

ஏப்ரல் 24, 2019 06:41

மதுரை: மதுரையில் நடந்த லோக்சபா தேர்தலில் விதிகள் மீறப்பட்டுள்ளன. இதற்கு காரணமான கலெக்டர் நடராஜனை இடமாற்றம் செய்ய வேண்டும்,'' என மார்க்சிஸ்ட் மாநில தலைமை செயற்குழு உறுப்பினர் கனகராஜ் தெரிவித்தார்.அவர் கூறியதாவது:மதுரையில் நடந்த தேர்தல் விதி மீறல்கள் குறித்து புகார் கொடுக்கப்பட்டுஉள்ளது.  

ஓட்டு எண்ணிக்கை மையத்துக்குள் தாசில்தார் சம்பூர்ணம் தலைமையில் நான்கு பேர், கலெக்டர் நடராஜனுக்கு தெரியாமல் சென்று இருக்க வாய்ப்பில்லை.ஒரு தொகுதியை தவிர, ஓட்டு எண்ணிக்கை மையத்தின் சாவிகளை ஒப்படைக்கப்படவில்லை. விதிமீறலில் ஈடுபட்ட கலெக்டரை மாற்றுவதை தவிர வேறு வழியே இல்லை.சட்டசபை தொகுதி வாரியாக ஓட்டு இயந்திரம் வைக்கப்பட்ட அறைகளின் சாவிகள் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட வேண்டும் என்பது விதி.  

இதுகுறித்து புகார் தெரிவித்தும் ஓட்டு எண்ணிக்கை மையத்துக்கு கலெக்டர் வரவில்லை. தபால் ஓட்டு பெட்டி வைக்கப்பட்ட இடத்தில் கண்காணிப்பு கேமராக்கள் இல்லை. தாசில்தார் சம்பூர்ணம் கையில் ஆவண அறையின் சாவி இல்லை.மற்றொரு அதிகாரி கையில்தான் சாவி இருந்துள்ளது. ஓட்டு எண்ணிக்கை மையத்துக்கள் நுழைந்த அதிகாரிகளை போலீசார் பிடித்து வைத்து இருந்தனர்.கலெக்டர் அலுவலக அதிகாரிகள்தான் அவர்களை மீட்டு சென்றுஉள்ளனர்.  

தாசில்தார் சம்பூர்ணம் உள்ளிட்டவர்கள் ஒரு கருவியே; பின்னணியில் உள்ளவர்கள் விசாரிக்கப்பட வேண்டும்.ஓட்டு எண்ணிக்கை மைய கண்காணிப்பு கேமரா மானிட்டர்கள் ஒரு மணி நேரம் அணைத்து வைக்கப்பட்டன. கலெக்டரை மாற்றக்கோரி வேட்பாளர் சார்பில் தலைமை தேர்தல் அதிகாரிக்கு புகார் மனு அளிக்கப்பட்டுஉள்ளது.மாநிலம் முழுவதும் ஓட்டு எண்ணிக்கை மையத்தில் கண்காணிப்பை பலப்படுத்த வேண்டும், என்றார்.வேட்பாளர் சு.வெங்கடேசன், தலைமை செயற்குழு உறுப்பினர் ராமலிங்கம் உடனிருந்தனர். 

 

தலைப்புச்செய்திகள்