Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மடியேந்தி பிச்சை எடுக்கும் போராட்டம்

ஏப்ரல் 24, 2019 06:18

சென்னை: சர்க்கரை ஆலை அதிபர் வீட்டிற்கு வெளியே, மடியேந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தில், நேற்று விவசாயிகள் ஈடுபட்டதால், சலசலப்பு ஏற்பட்டது.கரும்புக்கான நிலுவை தொகை கேட்டு, சென்னை, கோட்டூர்புரத்தில் உள்ள, தனியார் சர்க்கரை ஆலை அதிபர் வீட்டிற்கு வெளியே, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள், மடியேந்தி பிச்சை கேட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

இதில், சங்க தலைவர், அய்யாக்கண்ணு உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை, போலீசார் கைது செய்து, மாலையில் விடுவித்தனர். இந்த போராட்டம் காரணமாக, திடீர் சலசலப்பு ஏற்பட்டது.போராட்டம் குறித்து, விவசாயிகள் கூறியதாவது:கடலுார் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களை சுற்றியுள்ள விவசாயிகள், ஆரூரான் சர்க்கரை ஆலை மற்றும் அம்பிகா சர்க்கரை ஆலைக்கு, 14 லட்சம் டன் கரும்பு அனுப்பி, 30 மாதங்களுக்கு மேலாகிறது.மத்திய, மாநில அரசுகள் நிர்ணயித்த கரும்பு கொள்முதல் விலையாக, 420 கோடியை, ஆலை நிர்வாகங்கள் வழங்கவில்லை. 

இந்த ஆலைகள், 5,800 விவசாயிகள் பெயரில், எஸ்.பி.ஐ., - கார்ப்ரேஷன் வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி ஆகியவற்றில், 300 கோடி ரூபாய்க்கு மேல் கடனாக பெற்றுள்ளன. விவசாயிகளுக்கு தெரியாமலேயே, இந்த மோசடி நடந்துள்ளது. வங்கி அதிகாரிகள், கடன்களை திரும்ப கேட்டு, விவசாயிகளுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.இது குறித்து, அமைச்சர் மற்றும் வேளாண் துறை, சர்க்கரைத் துறை அதிகாரிகளிடம் முறையிட்டும் தீர்வு கிடைக்கவில்லை. எனவே, சம்மந்தப்பட்ட சர்க்கரை ஆலை அதிபர் வீட்டிற்கு வெளியே, மடியேந்தி பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்துகிறோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

தலைப்புச்செய்திகள்