Friday, 10th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஓட்டு எண்ணிக்கை மையத்தில் மழை நீர்

ஏப்ரல் 24, 2019 06:15

திருப்பூர்: திருப்பூர் எல்.ஆர்.ஜி., கல்லுாரியில் மழைநீர் அதிக அளவு தேங்கியதால், பாதுகாப்பு படையினர் நடமாட முடியாத சூழல் ஏற்பட்டது. 
திருப்பூர் எல்.ஆர்.ஜி., கல்லுாரி வளாகத்தில், லோக்சபா தொகுதிக்கான ஓட்டு எண்ணிக்கை மையம் அமைக்கப்பட்டுள்ளது. திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, பவானி, அந்தியூர், பெருந்துறை, கோபி ஆகிய ஆறு சட்டசபை தொகுதிகளின் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், 'ஸ்ட்ராங் ரூம்'களில் வைக்கப்பட்டுள்ளன.  

துணை ராணுவ படையினர், போலீசார், தொடர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு, திருப்பூரில் மட்டும், 50 மி.மீ., அளவுக்கு மழை பெய்தது. இதனால், கல்லுாரி வளாகத்தில், அண்ணா நுாற்றாண்டு விழா நினைவு கட்டடத்தின் முன்பாக, குளம் போல் தண்ணீர் தேங்கியது.இதனால், பாதுகாப்பு படையினர் வளாகத்தில் நடமாட முடியாத சூழல் ஏற்பட்டதாலும், கொசு தொல்லை மிகவும் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகவும், போலீசார் கவலை அடைந்தனர். தேர்தல் அதிகாரிகள் உத்தரவுப்படி, மாநகராட்சி அலுவலர்கள் விரைந்தனர்.'பொக்லைன்' உதவியுடன், மழைநீர் நிரந்தரமாக வெளியேறவும், வளாகத்தில் தேங்கி நிற்காதபடியும், மண் கொட்டி சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 
 

தலைப்புச்செய்திகள்