Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அமெரிக்காவின் அச்சுறுத்தலை சமாளிக்க இந்தியா தயார்

ஏப்ரல் 24, 2019 05:34

புதுடில்லி: 'ஈரானிய கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு, அமெரிக்கா விதித்துள்ள தடையால் உண்டாகும், எத்தகைய தாக்கத்தையும் சமாளிக்க, இந்தியா தயாராக உள்ளது' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

கடந்த, 2015ல், அமெரிக்க அதிபர் ஒபாமாவின் முயற்சியால், ஈரான் அணுசக்தி தடை ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்நிலையில், 2017ல், அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற, டொனால்டு டிரம்ப், ஒப்பந்தத்தை மீறி, அணு ஆயுத தயாரிப்பில் ஈரான் ஈடுபடுவதாக குற்றஞ்சாட்டினார். இதையடுத்து, ஒப்பந்தத்தை முறித்த டிரம்ப், 2018, மே மாதம், ஈரான் மீது, மீண்டும் பொருளாதார தடைகளை கொண்டு வந்தார். 

அத்துடன், இந்தியா, சீனா உள்ளிட்ட அனைத்து நாடுகளும், நவ., 4க்குள், ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை, நிறுத்த வேண்டும் என்றார். ஆனால், ஈராக், சவுதி அரேபியாவை அடுத்து, ஈரானில் இருந்து, அதிக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்தியா, அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்கவில்லை. எனினும், கச்சா எண்ணெய் இறக்குமதியை, ஆண்டுக்கு, 2.26 கோடி டன்னில் இருந்து, 1.50 கோடி டன்னாக குறைக்க ஒப்புக் கொண்டது. 

ஆனால், தன் பிடிவாதத்தை விட்டுக் கொடுக்காத, டிரம்ப், இந்தியா, சீனா உள்ளிட்ட எட்டு நாடுகளுக்கு மட்டும், ஆறு மாதங்களுக்கு ஈரானிய கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய, சிறப்பு திட்டத்தின் கீழ் அனுமதி வழங்கினார். இந்த சலுகைக் காலம், மே 2ல் முடிவடைவதால், அடுத்து எந்த நாடும், ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யக் கூடாது என, நேற்று முன்தினம் அமெரிக்கா அறிவித்தது. இதனால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிந்துள்ளது. 

இது குறித்து, மத்திய வெளிவிவகாரங்கள் துறை செய்தி தொடர்பாளர், ரவீஷ் குமார் கூறியதாவது: ஈரானிய கச்சா எண்ணெய் இறக்குமதி குறித்த, அமெரிக்காவின் முடிவால் ஏற்படும் எத்தகைய தாக்கத்தையும் சந்திக்க, இந்தியா தயாராக உள்ளது. இந்தியாவின் எரிசக்தி மற்றும் பொருளாதார நலனைக் கருத்தில் கொண்டு, அமெரிக்கா உட்பட, அனைத்து நாடுகளுடனும் கலந்து பேசி சுமுக தீர்வு காணப்படும் இவ்வாறு அவர் கூறினார். 

காங்., செய்தி தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜிவாலா கூறியதாவது: லோக்சபா தேர்தலையொட்டி, பிரதமர் மோடி, பெட்ரோல், டீசல் விலையை, மே, 23 வரை உயர்த்த வேண்டாம் என, பெட்ரோலிய நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளார். அன்று மாலை, பெட்ரோல், டீசல் விலையை, லிட்டருக்கு, 5 - 10 ரூபாய் வரை உயர்த்த திட்டமிட்டுள்ளார். ஆனால், மக்களை அவர் ஏமாற்ற முடியாது. இவ்வாறு அவர் கூறினார். 

 

தலைப்புச்செய்திகள்