Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஈரோடு மாவட்டத்தில் ஒரே மாதத்தில் 19,889 வாகனங்கள் பறிமுதல்

ஜுன் 11, 2021 05:20

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணியினை முதன்மை பணியாக கருதி போலீஸ் துறை சார்பில், பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் கடந்த மாதம் 10-தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மாநில, மாவட்ட எல்லைகளிலும், மாவட்டத்திற்குள்ளும் முக்கிய சந்திப்புகளில் ஊரடங்கிற்கு முன்பு வரை 63 சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தது.

ஊரடங்கு உத்தரவுக்கு பின்பு சோதனை தீவிரப்படுத்தும் வகையில் சோதனைச்சாவடிகள் அதிகப்படுத்தப்பட்டு தற்போது ஈரோடு கருங்கல்பாளையம் சோதனைச்சாவடி உள்பட மொத்தம் 80 சோதனைச்சாவடிகள் மூலம் வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதில் கர்நாடக மாநில எல்லைகளில் கூடுதலாக 5 சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு, மது கடத்தி வருபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதேபோல் மாவோயிஸ்ட், நக்சல் நடமாட்ட தகவலினால் கர்நாடக மாநில எல்லைகளில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஊரடங்கை மீறியதாக கடந்த மாதம் 10-ந் தேதி முதல் நேற்று (அதாவது நேற்று முன்தினம்) வரை ஒரே மாதத்தில் 21 ஆயிரத்து 708 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 19 ஆயிரத்து 733 இரு சக்கர வாகனங்கள், 156 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 19 ஆயிரத்து 889 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அரசு தற்போது அத்தியாவசிய தேவைகளுக்காக ஊரடங்கில் சில தளர்வுகள் அளித்துள்ளது. இதனை கடைபிடிக்கும் வகையில், மக்கள் தங்களது வீடுகளுக்கு அருகாமையில் உள்ள காய்கறி, மளிகை கடைகளில் பொருட்களை வாங்கி கொள்ள வேண்டும். வெகு தொலைவில் உள்ள கடைகளுக்கு வாகனங்களில் வந்து பொருட்களை வாங்குவதை தவிர்க்க வேண்டும்.

அரசின் அடுத்த தளர்வுக்கான உத்தரவு வரும் வரை மக்கள் பாதுகாப்பாக வீட்டில் இருக்க வேண்டும். இதை தவிர்த்து தேவையில்லாமல் ரோடுகளில் நடமாடினால் வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். அவ்வாறு பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள், கோர்ட்டு நடவடிக்கை பின்னர் தான் வாகன ஓட்டிகள் பெற முடியும்.

எனவே, அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கும், முன்களப்பணியாற்றும் போலீஸ் துறையினருக்கும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும். இவ்வாறு போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் கூறினார்.

தலைப்புச்செய்திகள்