Sunday, 16th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கொரோனாவுக்கு பலியான வாலிபரின் வங்கி கணக்கில் ரூ.42 ஆயிரம் அபேஸ்

ஜுன் 10, 2021 05:22

பெங்களூரு: பெங்களூரு ஒயிட்பீல்டு அருகே வசித்து வந்தவர் ராஜேஷ். இவருக்கு திருமணமாகி விட்டது. ராஜேசுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, ஒயிட்பீல்டு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த மாதம் (மே) 17-ந் தேதி அவர் அனுமதிக்கப்பட்டார். கடந்த மாதம் 22-ந் தேதி வரை ராஜேசின் உடல் நிலை சரியாக இருந்தது. பின்னர் மறுநாள் (மே 23-ந் தேதி) அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்து விட்டார். பின்னர் ராஜேசின் உடலை ஒப்படைக்கும் போது, அவரது மணிபர்சு, செல்போனை, மருத்துவமனை ஊழியர்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைத்திருந்தனர்.

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜேசின் மனைவி, தனது கணவரின் வங்கி கணக்கில் இருந்த பணத்தை எடுப்பதற்காக சென்றார். ஆனால் குறைந்த அளவே அவரது வங்கி கணக்கில் பணம் இருப்பது ராஜேசின் மனைவிக்கு தெரிந்தது. இதுபற்றி வங்கி அதிகாரிகளிடம் அவர் விசாரித்தார். அப்போது ராஜேஷ் உயிர் இழக்கும் முன்பாக, அவரது வங்கி கணக்கில் இருந்து ஒரு பெண்ணின் வங்கி கணக்குக்கு ரூ.40 ஆயிரம் பரிமாற்றம் செய்யப்பட்டு இருந்ததும், ஒரு செல்போனுக்கு ரூ.2,500-க்கு ரீசார்ஜ் செய்யப்பட்டு இருப்பதும் தெரிந்தது.

இந்த பண பரிமாற்றம் மற்றும் அந்த செல்போனுக்கு தனது கணவர் ரீசார்ஜ் செய்திருக்க வாய்ப்பில்லை என கருதிய ராஜேசின் மனைவி, நடந்த சம்பவங்கள் குறித்து ஒயிட்பீல்டு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் நர்சான ஆன்சி ஸ்டான்லி தான், ராஜேஷ் வங்கி கணக்கில் இருந்து பண பறிமாற்றம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து, ஆன்சி ஸ்டான்லியை போலீசார் கைது செய்தார்கள்.

விசாரணையில், கடந்த மாதம் 22-ந் தேதி ஆன்சி ஸ்டான்லியிடம் ராஜேஷ் பேசியுள்ளார். அப்போது தனது செல்போனுக்கு ரீசார்ஜ் செய்யும்படி கூறியுள்ளார். அவரும் சிறிய தொகைக்கு ரீசார்ஜ் செய்திருக்கிறார். அந்த சந்தர்ப்பத்தில் ராஜேசின் செல்போன் விவரங்கள், ரகசிய குறியீடு உள்ளிட்டவற்றை அருகில் இருந்து கவனித்த ஆன்சி ஸ்டான்லி, அந்த தகவலை எழுதி வைத்து கொண்டுள்ளார்.

பின்னர் ராஜேஷ் தூங்கும் போது, அவரது செல்போனை எடுத்து தனது தோழியின் வங்கி கணக்குக்கு ரூ.40 ஆயிரத்தை ஆன்சி ஸ்டான்லி அனுப்பி வைத்திருந்தார். மேலும் தன்னுடைய செல்போனுக்கு ரூ.2,595-க்கு ரீசார்ஜ் செய்து கொண்டு இருந்தார். மறுநாளே ராஜேஷ் இறந்து விட்டதால், இதுபற்றி அவருக்கு எந்த தகவலும் தெரியாமல் இருந்துள்ளது. அதே நேரத்தில் அவரது மனைவி வங்கி கணக்கை பரிசீலித்ததால் நர்சு ஆன்சி ஸ்டான்லி போலீசாரிடம் சிக்கி இருந்தார்.

கைதான நர்சுவிடம் இருந்து ரூ.42 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த பணம் ராஜேசின் மனைவியிடம் போலீசார் ஒப்படைத்துள்ளனர். கைதான நர்சு மீது ஒயிட்பீல்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

தலைப்புச்செய்திகள்