Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கிணற்றில் குதித்து கல்லூரி மாணவி தற்கொலை

ஜுன் 10, 2021 04:55

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் ஆலப்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட மலையடி வெண்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் குணசேகரன். இவர் சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் சுவேதா (வயது 20). இவர் செங்கல்பட்டில் உள்ள தனியார் கலைக் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

இநத நிலையில் சமூக வலைத்தளங்களில் விதவிதமாக புகைப்படங்களை பதிவிடுவதில் சுவேதா மிகுந்த ஆர்வம் காட்டி வந்ததாக தெரிகிறது. இந்த சூழ்நிலையில், அவர் வழக்கம்போல் செல்போன் மூலம் தனது புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் எனும் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். இதனையடுத்து அந்த படத்தை மர்ம நபர்கள் சிலர் மார்பிங் எனும் நவீன தொழில்நுட்பம் மூலம் மாணவி சுவேதாவை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர். அதன் பின்னர், இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படம் ஆபாசமாக சித்தரிக்கப்பட்டதை அறிந்த மாணவி அதிர்ச்சியடைந்தார்.

இதனால் கடும் மன உலைச்சலுக்கு ஆளான அவர், வீட்டுக்கு தெரியவந்து விடுமோ என்ற அச்சத்தில் 7-ந்தேதி வீட்டை விட்டு வெளியேறினார். பின்னர் நீண்ட நேரமாக தனது மகள் காணாமல் இருப்பதை கண்ட குடும்பத்தினர், அவரை பல இடங்களில் தேடிப்பார்த்தனர்.

இதனையடுத்து, நேற்று முன்தினம் சந்தேகத்தின் அடிப்படையில் அவர்களது வீட்டின் அருகேயுள்ள விவசாய கிணற்றின் அருகே அவரது வீட்டார் சென்று பார்த்தபோது, சுவேதா இறந்த நிலையில் பிணமாக மிதந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனை கண்டு பதறிப்போன குடும்பத்தினர் உடனடியாக செங்கல்பட்டு தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போலீசார், உடலை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், ஆபாசமாக புகைப்படத்தை சித்தரித்து வெளியிட்டு மாணவியின் தற்கொலைக்கு காரணமான மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

தலைப்புச்செய்திகள்