Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய சசிகலா முடிவு

ஜுன் 10, 2021 04:25

சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்று திரும்பிய சசிகலா சட்டமன்ற தேர்தலின் போது அரசியலில் ஈடுபடாமல் ஒதுங்கி இருந்தார். இந்த நிலையில் 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அ.தி.மு.க. நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் ஆட்சியை பிடிக்க முடியாத அளவுக்கு தோல்வியை சந்தித்தது.

65 தொகுதிகளில் மட்டுமே அ.தி.மு.க. வெற்றி பெற்றது.  அ.தி.மு.க.   ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு இடையே ஒருமித்த கருத்து இல்லாமல் தேர்தலை சந்தித்ததே தோல்விக்கு காரணம் என்று கட்சி நிர்வாகிகள் பலர் குற்றம் சாட்டி வந்தனர்.
இந்த நிலையில் அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்த  சசிகலா  தற்போது  அ.தி.மு.க.  நிர்வாகிகளிடம் தொலைபேசியில் பேசி வருவது கட்சி வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவிக்கையில், ‘‘சசிகலா  அவரது கட்சியினருடன் தான் பேசி உள்ளார். அ.தி.மு.க.வினர் யாருடனும் அவர் பேசவில்லை’’ என்று திட்டவட்டமாக கூறினார். இந்த நிலையில் அ.தி.மு.க. கட்சி நிர்வாகிகளுடன் சசிகலா தொலைபேசியில் பேசும் ஆடியோவும் அடுத்தடுத்து சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

தற்போது அ.தி.மு.க.வில் ஒற்றுமையின்மை மற்றும் ஒருமித்த கருத்து இல்லாத காரணத்தால் வேதனை அடையும் நிர்வாகிகளுக்கு ஆறுதல் தெரிவிக்கும் வகையில்  சசிகலா பேசி வருகிறார். அவர் தமிழ்நாடு முழுவதும் சென்று விரைவில் சுற்றுப்பயணம் செய்வார் என தகவல்கள் வருகிறது.

தற்போது கொரோனா ஊரடங்கு காலம் அமலில் உள்ளது. ஊரடங்கு முழுமையாக தளர்த்தப்பட்டு பொது போக்குவரத்து அமலுக்கு வந்ததும்   சசிகலா  ஒவ்வொரு மாவட்டத்துக்கும் சென்று கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசுவார். இதற்கான ஏற்பாடுகள் விரிவாக செய்யப்பட்டு வருகிறது. இன்னும் 3 மாதங்களில் அடுத்தடுத்து அரசியல் திருப்பங்கள் நிகழும்.

தலைப்புச்செய்திகள்