Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சர்ச்சையில் சிக்கும் மார்கன், பட்லர், ஆண்டர்சன்: பழைய ட்வீட்டுகளால் தொடரும் பிரச்சினை

ஜுன் 09, 2021 06:21

ஒலி ராபின்ஸனைத் தொடர்ந்து இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஒயின் மார்கன், ஜாஸ் பட்லர், ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோரின் பழைய ட்வீட்டுகள் தற்போது விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளன. இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியில் தற்போது இடம்பெற்ற ஒலி ராபின்ஸன், ஞாயிற்றுக் கிழமை அன்றுதான் தனது முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி முடித்தார். நியூஸிலாந்துக்கு எதிரான இந்தப் போட்டியில் அவர் 7 விக்கெட்டுகளை வீழ்த்திப் பாராட்டும் பெற்றிருந்தார்.

இந்நிலையில் கிட்டத்தட்ட 7-8 வருடங்களுக்கு முன், அவரது பதின்ம வயதில், கருப்பினத்தவர்கள், ஆசிய மக்கள், முஸ்லிம்கள், பெண்கள் எனப் பலதரப்பட்ட மக்களையும் கிண்டல் செய்து அவர் பதிவிட்டிருந்த ட்வீட்டுகள் பற்றிய சர்ச்சை எழுந்தது.

அவரது ட்வீட்டுகளில் காணப்பட்ட இனவெறி, பாலினப் பாகுபாடு ஆகியவற்றைக் காரணம் காட்டி, அவரை ஒட்டுமொத்தமாக எல்லாவிதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் நீக்கித் தடை விதித்தது. ராபின்ஸன் மன்னிப்பு கேட்டுவிட்டாலும், கொடுத்த தண்டனையை ஏற்றுக்கொண்டிருக்கிறார்.

தற்போது ராபின்ஸனைப் போலவே சக வீரர் ஸ்டூவர்ட் ப்ராடை ஆபாசமாகக் கலாய்த்து ட்வீட் செய்திருந்த ஆண்டர்சனும் விமர்சனதுக்கு உள்ளாகியுள்ளார். இப்போது இந்த ட்வீட் நீக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரமாகவே அணி வீரர்கள் இந்தப் பிரச்சினையால் அழுத்தத்தை உணர்வதாகவும், கொஞ்சம் கொஞ்சமாக இதுகுறித்து உணர்ந்து அனைவரும் நடப்பார்கள் என்றும் ஆண்டர்சன் பேசியுள்ளார்.

மேலும், "அது 10-11 வருடங்களுக்கு முன்னால் நடந்த விஷயம். இப்போது நான் மாறியிருக்கிறேன். அதுதான் பிரச்சினையே. விஷயங்கள் மாறும், நாம் தவறுகள் செய்வோம். இப்படியான பழைய ட்வீட்டுகளைப் பார்த்து, அதில் நாம் செய்த தவறுகள் என்ன என்பதைக் கற்க வேண்டும். இதுபோன்ற வார்த்தை பிரயோகங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்பதை உணரவேண்டும்" என்று ஆண்டர்சன் பேசியுள்ளார்.

மேலும், அலெக்ஸ் ஹேல்ஸுக்கு ஜாஸ் பட்லர் அனுப்பிய பழைய ட்வீட், மெக்கல்லமுடனான மார்கனின் ட்விட்டர் உரையாடல் என இன்னும் சில ட்வீட்டுகளையும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் விசாரித்து வருவதாகத் தெரிகிறது.
 

தலைப்புச்செய்திகள்