Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கூட்ட நெரிசலை தவிர்க்க வாடிக்கையாளர் வீடுகளுக்கு சென்று மதுபானங்களை வழங்க புதுச்சேரி கலால்துறை அனுமதி

ஜுன் 08, 2021 05:53

புதுச்சேரி: புதுவையில் ஊரடங்கில் மேலும் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதையடுத்து மதுபான கடைகளை திறக்க அரசு அனுமதித்துள்ளது. மதுபார்களை திறக்க அனுமதியில்லை. கள், சாராயம், மதுபான சில்லரை விற்பனை கடைகளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்து விற்பனை செய்யலாம். மதுக்கடைகளில் சமூக இடைவெளியை பின்பற்ற தடுப்பு கட்டைகள் அமைக்க வேண்டும் என கண்டிப்பாக உத்தரவிடப்பட்டுள்ளது.

மது வாங்க வரும் வாடிக்கையாளர்கள் மட்டுமின்றி, கடை ஊழியர்களும் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும். அனைத்து கடைகளின் வாசல்களிலும் வெப்ப பரிசோதனை செய்து கிருமிநாசினி வழங்க வேண்டும். கடை ஊழியர்கள் தடுப்பூசி போடுவதை உறுதி செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகளை கடைபிடிக்க தவறினால் மதுக்கடைகளின் உரிமம் சஸ்பெண்ட், ரத்து உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

மதுபான கடைகளில் கூட்டத்தை தவிர்க்க வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கு மதுபானங்களை வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கலால்துறை விதிமுறைகளுக்கு உட்பட்டு இதனை முடிவு செய்யலாம் என அறிவுறுத்தியுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து மதுபானக்கடை உரிமையாளர்கள் ஆன்லைன் செயலி மூலமும், போன் மூலமும் விபரங்களை பெற்ற மதுபானங்களை வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கே சென்று வழங்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர். புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மட்டுமே பொருந்தும் என்றும் கடை உரிமையாளர்களுக்கு கலால்துறை அறிவுறுத்தியுள்ளது.
 

தலைப்புச்செய்திகள்