Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தகுதியான கைதிகளை பரோலில் விடுவிக்க நடவடிக்கை அமைச்சர் ரகுபதி தகவல்

ஜுன் 04, 2021 03:19

புதுக்கோட்டை: சிறையில் உள்ள கைதிகளில் தகுதியானவர்களை பரோலில் விடுவிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகச் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார்.

புதுக்கோட்டை மாவட்டச் சிறையில் இன்று (மே 4) நடைபெற்ற கைதிகளுக்கான தடுப்பூசி முகாமை ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ''கொரோனா தொற்றுக் காலத்தில் சிறைத் துறையில் பணியாற்றி வரும் காவலர்கள், முன்களப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரின் பாதுகாப்பையும் தமிழக அரசு உறுதி செய்யும்.

சிறையில் உள்ள கைதிகளில் பரோலில் விடுவிப்பதற்குத் தகுதி படைத்த கைதிகள் குறித்து கணக்கெடுக்கப்பட்டு, விடுவிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனினும், தீவிரவாதச் செயல்கள் போன்ற குற்றங்களில் ஈடுபட்டவர்களை பரோலில் விடுவிப்பதற்கு வாய்ப்பில்லை. சிறைச் சாலைகளில் 57 சதவீதக் கைதிகளே உள்ளனர்.

கொரோனா காலத்தில் சிறையில் உள்ள கைதிகளின் எண்ணிக்கையைக் குறைக்கத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமிழக சிறைச்சாலையில் உள்ள கைதிகளில் இதுவரை 1,700 பேர் தாமாக முன்வந்து தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். மேலும், சிறைகளில் உள்ள அனைத்துக் கைதிகளுக்கும் கட்டாயம் கரோனா தடுப்பூசி போட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. விரைவில், சிறைகளில் உள்ள அனைத்துக் கைதிகளுக்கும் கரோனா தடுப்பூசி போடப்படும்.

கரோனா காலத்தில் சிறைகளில் மருத்துவப் பணியிடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் பணியிடங்கள் உரிய முறையில் நிரப்பப்பட்டு, கைதிகளுக்குத் தேவையான சிகிச்சைகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சிறைகளுக்குள் சட்டவிரோதப் பொருட்கள் கொண்டு செல்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார்.
 

தலைப்புச்செய்திகள்