Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழக பிளஸ்-2 தேர்வு: பெற்றோர் தெரிவித்த கருத்து பற்றி இன்று மாலை அமைச்சர் ஆலோசனை

ஜுன் 04, 2021 03:14

சென்னை: பிளஸ் -2 பொதுத்தேர்வை நடத்தலாமா? வேண்டாமா? என்பது குறித்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்கள், பள்ளிகள் சார்பில் இணையதளம் வாயிலாக கருத்துகள் கேட்கப்பட்டன.

கொரோனா நோய்த்தொற்று 2-வது அலை வேகமாக பரவியதன் காரணமாக பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளன. இதை தொடர்ந்து சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் பிளஸ் -2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.

குஜராத், மத்தியபிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட 7 மாநிலங்களில் மாநில பாடத்திட்டத்தில் பிளஸ் -2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் பிளஸ் -2 பொதுத்தேர்வு நடத்தப்படுமா? அல்லது ரத்து செய்யப்படுமா? என்பது இன்னும் முடிவாகவில்லை.

இது தொடர்பாக கடந்த 2 நாட்களுக்கு முன்பு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்  தலைமையில் நடந்த ஆலோசனையின் போது பெற்றோர், ஆசிரியர்கள், மாணவர்களிடம் கருத்துகள் கேட்டு அதன் அடிப்படையில் முடிவு எடுக்கலாம் என அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் பிளஸ் -2 பொதுத்தேர்வை நடத்தலாமா? வேண்டாமா? என்பது குறித்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்கள், பள்ளிகள் சார்பில் இணையதளம் வாயிலாக கருத்துகள் கேட்கப்பட்டன.

காலை 10 மணிக்கு தொடங்கி மாலை வரை கருத்துக்கள் கேட்கப்பட்டது. இதில் ஏராளமான மாணவர்கள், பெற்றோர், கல்வியாளர்கள் தங்களது கருத்துகளை எடுத்துரைத்தனர். பெரும்பாலான மாணவர்கள் பெற்றோருடன் ஆன்-லைனில் ஆஜராகி கருத்துகளை தெரிவித்தனர். இதில் அதிகமான மாணவர்கள் தேர்வு வேண்டாம் ரத்து செய்யுங்கள் என்று தங்கள் ஆசிரியரிடம் வலியுறுத்தி இருக்கின்றனர்.

இது குறித்து சில ஆசிரியர்கள் கருத்து கூறுகையில், பிளஸ்-2 வகுப்பில் அனைவரும் தேர்ச்சி. ஆனால் மதிப்பெண் அதிகம் பெற விரும்பும் மாணவர்கள் தேர்வை எழுதலாம் என்கிற ஒரு முடிவை அரசு எடுத்தால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் கூறி உள்ளனர். கல்வியாளர்கள் கருத்து கூறுகையில், பிளஸ்-2 தேர்வை இன்னும் இரு மாதங்களுக்கு பிறகு நடத்தலாம். அதுவரை உயர்கல்வி சேர்க்கையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று அரசுக்கு வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

தலைமை ஆசிரியர் சங்கம் கருத்து தெரிவிக்கையில் தேர்வு நடத்தினால் மட்டுமே மாணவர்களுக்கு உயர் கல்விக்கான பாதுகாப்பை வழங்க முடியும். அந்த வகையில் கொரோனா தொற்று குறைந்த பிறகு பொதுத்தேர்வை கட்டாயமாக நடத்த வேண்டும் என்று கூறி வருகின்றனர். மாணவர்கள், பெற்றோர் தரப்பில் சொல்லப்பட்ட கருத்துக்களை கல்வி அதிகாரிகள் அரசிடம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் முதன்மை கல்வி அதிகாரிகள் மாவட்ட கல்வி அதிகாரிகளுடன்  கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி காணொலி வாயிலாக இன்று மாலை ஆலோசனை மேற்கொள்கிறார். அதன் பிறகு கல்வியாளர்கள், பெற்றோர் நலச்சங்கங்கள், மாணவ அமைப்பினர் ஆகியோரிடமும் இணைய வழியில் ஆலோசனை நடத்தப்படுகிறது. இவர்கள் சொல்லும் கருத்துக்களை ஒருங்கிணைத்து முதல்-அமைச்சரிடம் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவிக்க உள்ளார். அதன் பிறகு அரசின் இறுதி முடிவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை அறிவிப்பார் என தெரிகிறது.
 

தலைப்புச்செய்திகள்