Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மத்தியில் பா.ஜ.க. ஆட்சியின் 7 ஆண்டுகளில் ‘நாடு பெருமைமிக்க தருணங்களை அனுபவித்தது’ - மோடி பெருமிதம்

மே 31, 2021 12:35

புதுடெல்லி: மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்து 7 ஆண்டுகள் முடிந்த நிலையில், நாடு பெருமைமிக்க தருணங்களை அனுபவித்ததாக பிரதமர் மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டார். மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. கூட்டணி அரசு 2014-ம் ஆண்டு மே மாதம் 26-ந்தேதி பதவி ஏற்றது. தற்போது 7 ஆண்டுகள் முடிந்துள்ளது.

இது தொடர்பாக பிரதமர் மோடி நேற்று ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பேசியபோது குறிப்பிட்டார். அது வருமாறு:- இன்று (நேற்று) மே 30-ந் தேதி, நாம் மனதின் குரல் நிகழ்ச்சியில் இருக்கிறோம். இது தற்செயலாக நமது அரசு பதவிக்கு வந்து 7 ஆண்டுகள் முடிந்துள்ளதை
குறிக்கிறது.

இந்த 7 ஆண்டுகளில் நாங்கள் ‘எல்லோருடைய வளர்ச்சியும், எல்லோருடைய நம்பிக்கையும்’ என்பதை தாரக மந்திரமாக பின்பற்றிவருகிறோம். நாம்
அனைவரும் ஒவ்வொரு கணமும், நாட்டின் சேவையில் அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வருகிறோம். பல நண்பர்கள் எங்களது 7 ஆண்டு கால பரஸ்பர பயணம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார்கள். இந்த 7 ஆண்டுகளில் நாங்கள் நிறைவேற்றியதெல்லாம் நாட்டுக்காகவும், நாட்டு
மக்களுக்காகவும்தான்.

இந்த ஆண்டுகளில் நாம் பெருமைமிக்க பல தருணங்களை ஒன்றாக அனுபவித்து இருக்கிறோம். இப்போது இந்தியா, மற்ற நாடுகளின் சிந்தனையுடனும், அழுத்தத்துடனும் இல்லாது நமது சுய நம்பிக்கையுடன் முன்னேறுகிறது. இதைப்பார்க்கும்போது நாம் பெருமிதம் கொள்கிறோம்.

நமக்கு எதிராக சதி செய்தவர்களுக்கு இந்தியா சரியான பதிலடியைக் கொடுத்த போது நமது நம்பிக்கை உயர்ந்தது. தேசிய பாதுகாப்பு தொடர்பான
பிரச்சினைகளில் நாடு சமரசம் செய்து கொள்ளாதபோது, நமது ஆயுதப்படைகளின் வலிமை பெருகுகிறது. நாம் சரியான பாதையில்தான் செல்கிறோம் எனபதை உணர்கிறோம்.

பல பழைய பிரச்சினைகள் முழுமையான அமைதி மற்றும் நல்லிணக்கத்துடன் தீர்க்கப்பட்டிருக்கின்றன. வடகிழக்கில் இருந்து காஷ்மீர் வரையில் அமைதி
மற்றும் வளர்ச்சியால் புதிய நம்பிக்கை எழுந்துள்ளது.

நாடு சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளில் 3.5 கோடி கிராமப்புற வீடுகளில்தான் குடிநீர் குழாய் இணைப்பு கிடைத்திருந்தது. ஆனால் கடந்த 21 மாதங்களில் 4.5
கோடி வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் 15 மாதங்கள் கொரோனா காலம். ஆயுஷ்மான் யோஜனா காப்பீட்டு திட்டத்தால் ஏழை மக்கள் புதிய வாழ்வு பெற்றுள்ளனர்.

பழங்குடி பகுதிகளை சேர்ந்த பலர் தற்போதுதான் முதன்முதலாக சாலை வசதி கிடைத்துள்ளதாக எனக்கு தகவல் அனுப்பி உள்ளனர். இதேபோன்று
வங்கிக்கணக்கு தொடங்கிய மகிழ்ச்சியை பலர் பகிர்ந்துகொண்டுள்ளனர். பல்வேறு திட்டங்களால் வேலை வாய்ப்பினை பலர் பெற்றிருக்கிறார்கள். மத்திய அரசின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் வீடுகள் பெற்றவர்களிடமிருந்து புதுமனை புகுவிழா அழைப்பிதழ்கள் வந்துள்ளன.

இந்த 7 ஆண்டுகளில் டிஜிட்டல் பண பரிமாற்றங்களில் ஒரு புதிய திசையை உலகுக்கு இந்தியா காட்டி உள்ளது. செயற்கைக்கோள்களை விண்ணில்
செலுத்துவதிலும், சாலைகள் அமைப்பதிலும் சாதனை படைக்கிறோம். பல கடினமான சோதனைகளையும் இந்தியா கடந்து வந்துள்ளது. ஒவ்வொரு சோதனையிலும் நாடு வலிமையாகி இருக்கிறது.

கொரோனா பெருந்தொற்று வடிவில் நாம் தொடர்ந்து சோதனைக்குள்ளாகி இருக்கிறோம். இது ஒட்டுமொத்த உலகையும் பாதித்துள்ள ஒரு நெருக்கடி ஆகும். இந்த பெருந்தொற்றுக்கு மத்தியிலும், இந்தியா முன்னேறி வருகிறது. முதல் அலையில் நாம் தைரியமாக போராடினோம். இந்த முறையும் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் வெற்றி பெறுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்