Monday, 3rd June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

முதியோருக்கு வீடுகளின் அருகே தடுப்பூசி மையம் - மத்திய அரசு நடவடிக்கை

மே 28, 2021 11:12

புதுடெல்லி: முதியோருக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் உதவுகிற வகையில் வீடுகளின் அருகே கொரோனா வைரஸ் தடுப்பு மையம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரசை வீழ்த்துவதற்காக ஜனவரி 16-ந் தேதி முதல் தடுப்பூசி திட்டம் அமலில் இருந்து வருகிறது.

இதற்கென அமைக்கப்பட்டுள்ள மையங்கள் தொலைவிடங்களில் அமைந்திருந்தால், அங்கு முதியோரும், மாற்றுத்திறனாளிகளும் சென்று தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்வதில் சிரமம் ஏற்படுகிறது. இதைத் தடுக்கிற விதத்தில் அவர்களின் வீடுகளின் அருகே தடுப்பூசி மையம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதையொட்டிய வழிகாட்டும் நெறிமுறைகளை மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்டது.

வீட்டுக்கு அருகில் கொரோனா தடுப்பூசி மையங்கள் கீழ்க்காணும் தகுதியுள்ளவர்களுக்காக சிறப்பாக ஏற்பாடு செய்யப்படும். மற்ற எல்லா வயதினருக்கும் தற்போதுள்ள கொரோனா தடுப்பூசி மையங்கள் தொடரும்.

* 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள்.

* 60 வயதுக்கு கீழான, மாற்றுத்திறனாளிகள்.

மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள வழிகாட்டும் நெறிமுறைகள்:-

* சமூக ரீதியிலான அணுகுமுறை பின்பற்றப்படவேண்டும். வீடுகளின் அருகே பஞ்சாயத்து அலுவலகம், துணை சுகாதார மையங்கள், சுகாதார நலவாழ்வு
மையங்கள், சமூக நலக்கூடங்கள், வாக்குச்சாவடிகள், பள்ளிக்கூடங்கள், குடியிருப்போர் நலச்சங்கங்கள், முதியோர் இல்லங்களில் தடுப்பூசி மையங்கள்
அமைக்கலாம். அவற்றில் தடுப்பூசி போட தனி அறை, காத்திருக்கும் பகுதி, ஊசி போட்ட பின்னர் 30 நிமிடங்கள் இருந்து செல்ல கண்காணிப்பு அறை இருக்க வேண்டும்.

* இவற்றை கோவின் தளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

* வீடுகளின் அருகே அமைக்கிற இத்தகைய தடுப்பூசி மையங்களில் 5 பேர் குழு இருக்க வேண்டும். குழு தலைவராக ஒரு டாக்டர் இருக்க வேண்டும். தடுப்பூசி
செலுத்துனர், தடுப்பூசி அதிகாரி 3 பேர் இருக்க வேண்டும்.

* முதியோர் இல்லம் போன்ற ஒரே கூரையின் கீழ் பயனாளிகள் குழு இருக்கிறபோது, செயல்பாட்டு வழிகாட்டுதல்கள்படி வீட்டின் அருகேயான தடுப்பூசி மையங்களை அந்த தளத்தில் ஏற்பாடு செய்யலாம்.

* தடுப்பூசி போடுவதற்கு பயனாளிகளின் பதிவு, அப்பாயின்ட்மென்ட் ஆகியவற்றை முன்கூட்டியோ, அந்த இடத்திலேயோ, கோவின் தளத்திலோ பதிவு செய்ய வேண்டும்.

* பயனாளிகளை வரிசைப்படுத்த வேண்டும்.

* வீட்டின் அருகே அமைக்கிற தடுப்பூசி மையங்களை (என்.எச்.சி.வி.சி.), தற்போதுள்ள சி.வி.சி. உடன் இணைக்க வேண்டும்.

* தேவைப்படும் இடங்களில் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் பயணத்தை எளிதாக்குங்கள்.

* தடுப்பூசி மையத்தினை முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வசதியானதாக, இணக்கமானதாக மாற்றுங்கள்.

* இந்த பரிந்துரைகளை கவனத்தில் கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனைத்து மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் அறிவுறுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்