Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கொரடாச்சேரி பகுதியில் 41 பேருக்கு கொரோனா தொற்று: 8 இடங்கல் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிப்பு

மே 27, 2021 08:00

திருவாரூர்: திருவாரூர் அருகே கொரடாச்சேரி பகுதியில் 41 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் 8 இடங்களில் சாலைகளில் தடுப்புகள் அமைத்து தடைசெய்யப்பட்ட பகுதியாக எச்சரிக்கை அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்றின் 2-வது அலை தீவிரமாகி வருகிறது. இதனால் தொற்று பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. திருவாரூர் அருகே கொரடாச்சேரி ஒன்றியத்தில் நோய்த்தொற்று அதிகம் உள்ள பகுதிகளை கண்டறிந்து அந்தப்பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு தடுப்பு அமைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி கொரடாச்சேரி ஒன்றியத்தில் பெருந்தரக்குடி ஊராட்சி மேம்பலத்தில் ஒரே பகுதியில் 6 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு அப்பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் திருமாஞ்சோலையில் 4 பேருக்கும், அம்மையப்பனில் 4 பேருக்கும், திருவிடைவாசல் ஊராட்சியில் 7 பேருக்கும், வடகண்டத்தில் 5 பேருக்கும், கொரடாச்சேரி பேரூராட்சிக்குட்பட்ட வெள்ளைமதகு பகுதியில் 4 பேருக்கும், ஊர்குடியில் 2 இடங்களில் 11 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட பகுதிகளான 8 இடங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. கொரடாச்சேரி ஒன்றியத்தில் தடைசெய்யப்பட்டு கண்காணிக்கப்பட்டு வரும் பகுதிகளில் டாக்டர் விவேக் தலைமையில் சுகாதாரதுறை குழுவினர் சுகாதார பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடனும், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என ஒன்றியக்குழு தலைவர் உமாபிரியா பாலச்சந்தர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதேபோல் திருவாரூர் அருகே இளவங்கார்குடி ஊராட்சி பவித்திரமாணிக்கம் ஜி.ஆர்.டி. கார்டன், மற்றும் ஜி.ஆர்.டி.நகர், பெரும்புகளூர் சாலை பகுதி உள்ளிட்ட பல இடங்களில் கடந்த 10-நாட்களில் 96-பேர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட இடங்களில் ஊராட்சி மன்ற நிர்வாகம் சார்பில் தலைவர் ராஜ இளங்கோவன் மற்றும் வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி செயலர், தூய்மைப் பணியாளர்கள் கிரிமி நாசினி தெளித்து சாலையின் குறுக்கே தடைசெய்யப்பட்ட பகுதி என அறிவிப்பு செய்து தடுப்புகள் அமைத்துள்ளனர்.  

கூத்தாநல்லூர் பகுதிகளில் ஒரே நாளில் 3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 

தலைப்புச்செய்திகள்