Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வேளாண் அவசர சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என பி.ஆர்.பாண்டியன் கருப்பு கொடியேந்தி ஆர்ப்பாட்டம்

மே 27, 2021 07:44

திருவாரூர்: மத்திய அரசு அமல்படுத்தி உள்ள 3 வேளாண் அவசர சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லையில் 6 மாதமாக போராடி வரும் விவசாயிகளின் போராட்டத்தை ஆதரித்தும் விவசாய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தனது வீட்டின் முன்பு விவசாயிகள் சங்க நிர்வாகிகளுடன் கருப்புக்கொடியேந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். பின்பு நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: 

வேளாண் அவசர சட்டங்களுக்கு எதிராக வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். டெல்லியில் விவசாயிகள்
போராட்டத்தை தொடங்கி 6 மாதங்கள் கடந்து விட்டது. உயிரை பணயம் வைத்து விவசாயிகள் போராடி வருகிறார்கள். இந்தப் போராட்டத்தை திசை திருப்ப
எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்துள்ளது. இனியும் காலம் கடத்தாமல் வேளாண் அவசர சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்.

தமிழக சட்டமன்றத்தில் வேளாண் சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படும் என்ற உத்தரவாதத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு
உள்ளார். இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது. இது போராட்டக் களத்தில் உள்ள விவசாயிகளுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் உள்ளது. இவ்வாறு
பி.ஆர்.பாண்டியன் கூறினார்.

தலைப்புச்செய்திகள்