Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஜே.பி.நட்டா, ஸ்மிருதி இரானி ‘டுவிட்டர்’ கணக்குகளை நிரந்தரமாக முடக்க வேண்டும்: காங்கிரஸ்

மே 22, 2021 06:27

புதுடெல்லி: கொரோனா விவகாரத்தில் மத்திய அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் நோக்கத்தில் காங்கிரஸ் கட்சி தயாரித்ததாக கூறப்படும் ஆவணங்களை (டூல்கிட்) சமீபத்தில் பா.ஜனதா வெளியிட்டது. அவற்றை தங்கள் ‘டுவிட்டர்’ பக்கத்திலும் பா.ஜனதா தலைவர்கள் வெளியிட்டனர்.

ஆனால், அவை போலி ஆவணங்கள் என்று காங்கிரஸ் ஆட்சி நடக்கும் சத்தீஷ்கார் மாநிலத்தில் காங்கிரஸ் சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர். இந்தநிலையில், ‘டுவிட்டர்’ நிறுவனத்துக்கு காங்கிரஸ் சமூக வலைத்தள பிரிவின் தலைவர் ரோகன் குப்தா, காங்கிரஸ் ஆராய்ச்சி பிரிவு தலைவர் ராஜீவ் கவுடா ஆகியோர் ஒரு கடிதம் எழுதியுள்ளனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

பா.ஜனதா தலைவர் ஜே.பி.நட்டா, பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ், மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி, பா.ஜனதா செய்தித்தொடர்பாளர் சம்பிட் பத்ரா ஆகியோர் திட்டமிட்டு சதிசெய்து, காங்கிரஸ் ஆராய்ச்சி பிரிவின் லெட்டர்ஹெட்டை போலியாக தயாரித்து, அதில் பொய்யான, வஞ்சகமான வாக்கியங்களை அச்சடித்துள்ளனர்.

அதை தங்களது ‘டுவிட்டர்’ பக்கத்தில் பரப்பி விட்டுள்ளனர். இதன்மூலம் பொய் தகவல்களை பரப்பி, சமூகத்தில் அமைதியையும், நல்லிணக்கத்தையும் சீர்குலைப்பதே அவர்களின் நோக்கம். ஆகவே, மேற்கண்ட 4 பேர் மற்றும் அந்த ஆவணங்களை பகிர்ந்தவர்களின் ‘டுவிட்டர்’ கணக்குகளை நிரந்தரமாக முடக்க வேண்டும்.

இவர்கள் இதுபோன்று போலி ஆவணங்களை தயாரிப்பதையே வாடிக்கையாக கொண்டவர்கள். அவர்கள் வெளியிட்டது போலியான ஆவணங்கள். பொய்யான,
தீங்கு விளைவிக்கக்கூடிய பதிவுகளை நீக்குவது டுவிட்டரின் கொள்கை.

ஆகவே, டுவிட்டரை முற்றிலும் தவறாக பயன்படுத்திய அவர்களது பதிவுகளை நீக்க வேண்டும். போலி ஆவணங்கள் குறித்து டுவிட்டரே தனியாக விசாரணை
நடத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

இதற்கிடையே, ‘டூல்கிட்’ விவகாரத்தில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பா.ஜனதா செய்தித்தொடர்பாளர் சம்பிட் பத்ரா வெளியிட்ட பதிவை ‘டுவிட்டர்’ நிறுவனம்
‘புனையப்பட்ட செய்தி’ என்று முத்திரை குத்தி உள்ளது.

ஏமாற்றும் நோக்கத்தில் திருத்தப்பட்ட, புனையப்பட்ட வீடியோ, ஆடியோ மற்றும் படங்களை இதுபோன்று முத்திரை குத்துவோம் என்றும் கூறியுள்ளது.

தலைப்புச்செய்திகள்