Sunday, 16th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஊட்டி மலர் கண்காட்சி 2வது ஆண்டாக ரத்து- ஆன்லைனில் கண்டு ரசிக்க ஏற்பாடு

மே 22, 2021 06:22

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவில் ஆண்டுதோறும் கோடை சீசனையொட்டி மலர் கண்காட்சி நடத்தப்படும். ஆனால் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக மலர் கண்காட்சி ரத்து செய்யப்பட்டது. இந்த ஆண்டு மலர் கண்காட்சி நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 2-வது ஆண்டாக மலர் கண்காட்சி ரத்து செய்யப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் அங்கு செய்யப்பட்டுள்ள மலர் அலங்காரங்களை பொதுமக்கள் தங்களது வீட்டில் இருந்தே ஆன்லைன் மூலம் கண்டு ரசிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதனை நேற்று வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.

பின்னர் மலர் அலங்காரங்களை பார்வையிட்ட பிறகு அவர் நிருபர்களிடம் கூறுகையில், தோட்டக்கலைத்துறை சார்பில் மலர் கண்காட்சிக்கான 293 ரகங்களை சேர்ந்த 5 லட்சம் செடிகள் நடவு செய்யப்பட்டதோடு, 25 ஆயிரம் பூந்தொட்டிகள் பராமரிக்கப்பட்டு வந்தது. இதை ஆன்லைனில் பார்வையிட வழிவகை ஏற்படுத்தப்பட்டு உள்ளது. ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கான ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்படும். தமிழகத்தில் கூடுதலாக டாக்டர்கள், செவிலியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றார்.

இதில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, தோட்டக்கலை இணை இயக்குனர் சிவசுப்பிரமணியம், எம்.எல்.ஏ.க்கள் கணேஷ், பொன்.ஜெயசீலன் மற்றும் அரசுத்துறை
அலுவலர்கள் உடனிருந்தனர்.

கூகுள் டிரைவில் தாவரவியல் பூங்கா-2021 என உள்ளீடு செய்து ட்ரோன் கேமரா மூலம் பூங்காவின் இயற்கை எழில் மிகுந்த காட்சி, கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு மலர் அலங்காரம், கண்ணாடி மாளிகை போன்றவற்றை 5 நிமிட வீடியோவாக பார்க்கலாம். முன்னதாக ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் வனத்துறை அமைச்சர் முன்கள பணியாளர்களுக்கு முககவசங்களை வழங்கினார்.

தலைப்புச்செய்திகள்