Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நோய் எதிர்ப்புச்சக்தியை அளவிட கருவி கண்டுபிடிப்பு

மே 22, 2021 05:43

புதுடெல்லி: ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்ட பின்பு உடலில் கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு பொருள் (ஆன்டிபாடி) உருவாகும். இது எந்தளவுக்கு இருக்கிறது என்பதை கண்டுபிடிக்க உதவும் புதிய கருவி (டிப்கோவன்) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது முற்றிலும் உள்நாட்டு விஞ்ஞானிகளைக்கொண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கருவியை டி.ஆர்.டி.ஓ. என்னும் ராணுவ ஆராய்ச்சி, மேம்பாட்டு அமைப்பின் கீழ் செயல்படும் உடலியல் மற்றும் அதன் சார்பு அறிவியல்கள் தொடர்பான
பாதுகாப்பு நிறுவனமும், டெல்லியை சேர்ந்த வான்கார்டு டயாக்னஸ்டிக் நிறுவனமும் சேர்ந்து கண்டுபிடித்துள்ளன.
 
கொரோனா வைரஸ் தொடர்பான ஆன்டிஜென்களை குறிவைத்து, மனித சீரம் அல்லது பிளாஸ்மாவில் உள்ள நோய் எதிர்ப்பு பொருட்களை கண்டறிவதுதான் இந்தக் கருவியின் முக்கிய பயன் ஆகும். இந்த கருவி கொரோனா வைரசின் ஸ்பைக் மற்றும் நியூக்ளியோகேப்சிட் (எஸ் அண்ட் என்) புரதங்களை நேர்த்தியாக கண்டுபிடிக்கும்.

மேலும் இதைக் கொண்டு டெல்லியில் உள்ள பல்வேறு கொரோனா ஆஸ்பத்திரிகளில் 1,000-க்கும் மேற்பட்ட நோயாளிகளின் மாதிரிகள் குறித்து விரிவாக ஆய்வு
செய்யப்பட்டுள்ளது.

இந்த கருவியை விற்பனைக்காக தயாரிக்கவும், வினியோகிக்கவும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கடந்த மாதம் ஒப்புதல் அளித்துள்ளது. அதைத் தொடர்ந்து தற்போது இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம், மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு நிறுவனம், மத்திய சுகாதார அமைச்சகம் ஆகியவை ஒப்புதல் அளித்துள்ளன.

இந்த கருவியை கொண்டு சோதனை நடத்துவதற்கு 75 நிமிடங்கள் பிடிக்கும். இந்தக் கருவியின் ஆயுள், 18 மாதங்கள்.

இந்த கருவியை தேவையான தருணத்தில் கண்டுபிடித்து இருப்பதற்காக டி.ஓ.டி.ஓ.வின் முயற்சிகளை ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங்கும், டி.ஆர்.டி.ஓ.வின் தலைவர் ஜி.சதீஷ் ரெட்டியும் பாராட்டி உள்ளனர்.

தலைப்புச்செய்திகள்