Sunday, 16th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கொரோனா பாதிப்பால் ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் உயிரிழப்பு- பிரதமர் மோடி இரங்கல்

மே 20, 2021 06:21

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநில முன்னாள் முதல்வர் ஜெகநாத் பகாடியா (வயது 89). காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இவர், 1980-81 காலகட்டத்தில் ராஜஸ்தான் முதல்வராக பதவி வகித்தார். அரியானா மற்றும் பீகார் மாநில கவர்னராகவும் பொறுப்பு வகித்துள்ளார். முதுமை காரணமாக ஓய்வில் இருந்த அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ராஜஸ்தான் மாநில முன்னாள் முதல்வர் ஜெகந்நாத் பகாடியா மறைவு தனக்கு வேதனை அளிப்பதாகவும்,
தனது நீண்ட அரசியல் மற்றும் நிர்வாக வாழ்க்கையில், சமூக அதிகாரமளித்தலுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை வழங்கியதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். மேலும், அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் இரங்கல் தெரிவிப்பதாகவும் மோடி கூறி உள்ளார்.

ஜெகநாத் மறைவால் மிகவும் அதிர்ச்சியடைந்ததாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கூறி உள்ளார். ஆளுநராகவும், மத்திய அமைச்சராகவும் பணியாற்றிய
அவர், நாட்டின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்தார் என்றும் கெலாட் நினைவுகூர்ந்துள்ளார்.

ஜெகநாத் பகாடியாவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் ராஜஸ்தானில் ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. தேசியக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும். அனைத்து அரசு அலுவலகங்களும் இன்று மூடப்படும். ஜெகநாத் உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு செய்யப்படும் என்றும் ராஜஸ்தான் முதல்வர் கெலாட் கூறி உள்ளார்.

தலைப்புச்செய்திகள்