Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஒரு கோடி ஸ்புட்னிக் வாங்குகிறது மும்பை மாநகராட்சி: டெண்டரை சமர்ப்பித்த 3 நிறுவனங்கள்

மே 20, 2021 06:07

மும்பை மாநகராட்சி கரோனாவைக் கட்டுப்படுத்த 1 கோடி ஸ்புட்னிக் தடுப்பூசியை இறக்குமதி செய்யதிட்டமிட்டுள்ளது. இதற்காக3 நிறுவனங்கள் டெண்டர் விண்ணப்பத்தை சமர்ப்பித்துள்ளன. கடந்த ஆண்டு ஏற்பட்ட கரோனா வைரஸ் பரவலின்போதும், தற்போது உருவெடுத்துள்ள 2-வது அலையின்போதும் மும்பை பெருமளவில் தொற்றுக்கு ஆளானது.இருப்பினும் விரைவான நடவடிக்கையால் தொற்று பரவல் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட் டுள்ளது.

இந்நிலையில் உள்நாட்டில் தயாராகும் தடுப்பூசி மருந்துகள் போதுமான அளவு இல்லாத சூழலில், வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்வதற்கு மும்பை மாநகராட்சிக்கு கடந்த வாரம் அனுமதி அளிக்கப்பட்டது. இதன்படி ரஷ்யாவிலிருந்து 1 கோடி ஸ்புட்னிக் தடுப்பூசி மருந்துகளை விநியோகிக்க மும்பை மாநகராட்சி டெண்டர் கோரியுள்ளது. இதன் மதிப்பு ரூ.700 கோடியாகும். இவற்றை 2 மாதங்களில் சப்ளை செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் நிதி நகரமாகக் கருதப்படும் மும்பையில் கரோனா பரவலின் இரண்டாவது அலை தீவிரமாக உள்ளது. இதைக் கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி ஆணையர் இக்பால் சிங் சாஹல்மேற்கொண்டுள்ளார். மூன்றாவது அலை வருவதற்குள் அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக தற்காலிக மருத்துவமனைகள் உருவாக்கப்பட்டு தடுப்பூசி போட ரூ.800 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

மொத்தம் 1.5 கோடி தடுப்பூசி மருந்துகள் கைவசம் உள்ள நிலையில் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டு அடுத்த 60 நாளில் நகரில் உள்ள அனைவருக்கும் போட்டு முடிக்கப்படும் என அவர் குறிப்பிட்டார். இதன் மூலம் மூன்றாவது அலை பரவலைத் தடுக்க முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

ஸ்புட்னிக் சப்ளை செய்வதற்கான டெண்டரில் மூன்று நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. இதில் லண்டனைச் சேர்ந்த தலசீன் இண்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனமும், ஹைதராபாதைச் சேர்ந்த இரண்டு நிறுவனங்களும் அடங்கும். இவைஸ்புட்னிக் தடுப்பூசி மருந்தை சப்ளை செய்வதற்காக ரஷ்ய நிறுவனத்தின் விநியோகஸ்தர்களாக உள்ளதாக சாஹல் தெரிவித்தார்.

18 வயது முதல் 45 வயது பிரிவினருக்கு தடுப்பூசி போட மாநகருக்கு மட்டும் 1 கோடி தடுப்பூசி மருந்துகள் தேவைப்படும். இது தவிர 50 லட்சம் மருந்துகள் முதியவர்களுக்கு ஒதுக்கப்படும்.

மே 18-ம் தேதி முடிவடைவதாக இருந்த டெண்டர் தேதி மே 25-ம் தேதி வரை நீட்டிக் கப்பட்டுள்ளது. பைசர், மாடர்னா இன்கார்ப்பரேஷன், ஜான்சன் அண்ட் ஜான்சன், சீரம்இன்ஸ்டிடியூட் இந்தியா லிமிடெட், பாரத் பயோடெக் ஆகிய நிறுவனங்களிடமிருந்தும் டெண்டர்விண்ணப்பங்களை எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்தார்.

தற்போது நகரில் கரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் விகிதம் 31 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைந்துள்ளது. இதுஇம்மாத இறுதிக்குள் 2 சதவீதமாகக் குறையும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்