Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கொரோனாவில் பெற்றோரை இழந்த குழந்தைகளின் மறுவாழ்வுக்கு நடவடிக்கை - மத்திய அரசு தகவல்

மே 18, 2021 05:36

புதுடெல்லி: கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் மறுவாழ்வுக்கான வழிமுறையை உருவாக்கியிருப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது. கொரோனாவின் 2-வது அலை நாடு முழுவதும் பெருத்த சேதங்களை உருவாக்கி உள்ளது. இதில் முக்கியமாக, ஏராளமான குழந்தைகளை அனாதைகளாக மாற்றியிருக்கும் சோகமும் அரங்கேறி இருக்கிறது.

குறிப்பாக கொரோனாவின் கோரப்பிடியால் தந்தை மற்றும் தாயை பறிகொடுத்த குழந்தைகள் அடைக்கலம் நாடி அலையும் தகவல்கள் சமூக வலைத்தளங்களில்
பரவி வருகின்றன. தங்களை கவனித்துக்கொள்ளுமாறு குழந்தைகளே நேரடியாக ஆதரவுக்கரம் நாடும் தகவல்களும் மனிதாபிமானம் கொண்ட நெஞ்சங்களை
உலுக்கி வருகிறது.

இதைத்தொடர்ந்து கொரோனாவால் பெற்றோரை இழந்து அனாதைகளாக மாறியிருக்கும் குழந்தைகளின் மறுவாழ்வுக்கான வழிமுறைகளை உருவாக்கி இருப்பதாக மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. இது தொடர்பாக பொது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ள அமைச்சகம், மேற்படி ஆதரவுக்கரம் நாடி பொதுவெளிக்கு வரும் நடவடிக்கையிலோ அல்லது அத்தகைய கோரிக்கைகளை ஊக்கப்படுத்தவோ வேண்டாம் என பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

இதுகுறித்து அமைச்சகம் மேலும் கூறியிருப்பதாவது:-

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளை 24 மணி நேரத்துக்குள் மாவட்ட குழந்தைகள் நலக்குழு முன் ஒப்படைக்க வேண்டும். இதற்கு உள்ளூர் குழந்தைகள் நலக்குழுவினர் மாவட்ட குழந்தைகள் நலக்குழுவுக்கு உதவ வேண்டும். மாவட்ட நலக்குழுவினர், குழந்தையின் உடனடித் தேவையை கண்டறிந்து, குழந்தையின் மறுவாழ்வுக்கு பொருத்தமான உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும். அதாவது குழந்தையை பராமரிப்பாளர்களிடம் கொடுப்பது அல்லது நிறுவனம்-நிறுவனமற்ற பராமரிப்பில் வைப்பது போன்றவை குறித்து முடிவெடுக்க வேண்டும்.

குழந்தைகளை அவர்களின் குடும்பத்திலும் சமூகச் சூழலிலும் முடிந்தவரை தக்கவைத்துக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும். அதேநேரம் சிறார் நீதிச் சட்டத்தின் கீழ் பரிந்துரைக்கப்பட்டுள்ளபடி, அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்து, அவர்களின் நலனை பாதுகாக்கவும் வேண்டும். எந்தவொரு உறவினரின் பராமரிப்பிலும் குழந்தையை கொடுத்தாலும், அதன் நல்வாழ்வை மாவட்ட குழந்தைகள் நலக்குழு தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். அதேநேரம் குழந்தையின் அடையாளத்தை பாதுகாப்பதில் கவனமாக இருக்க வேண்டும்.

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் விவரங்களை குழந்தைகள் நல உதவி எண் 1098-ஐ தொடர்பு கொண்டு தெரியப்படுத்தலாம். அனாதை குழந்தைகளை தத்தெடுக்க விரும்புவோர் மத்திய தத்தெடுப்பு வள ஆணையத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

தலைப்புச்செய்திகள்