Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நிதி நிறுவனங்களின் கடன் தொல்லையால் பெண்கள் தீக்குளிக்க போவதாக கூடியதால் பரபரப்பு

மே 17, 2021 11:15

திருவாரூர்: திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட மருதபட்டிணம் ரயில்வே கேட் அருகில் உள்ள தியாகி சின்னசாமி தெருவில் வசிக்கும் பெண்கள் தனியார் நிதி நிறுவனங்களின் கடன் தொல்லையால் தீக்குளிக்கப் போவதாக கூறி கூடியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

திருவாரூர் நகரத்திற்கு உட்பட்ட மருதபட்டிணம் ரோடு,தியாகி சின்னசாமி தெரு,பேட்டை தெருவைச் சார்ந்த பெண்கள் திருவாரூரில் இயங்கி வரும் மைக்ரோ ஃபைனான்ஸ் எனப்படும் தனியார் நிதி நிறுவனங்களிடம் குழு கடன் பெற்று மாத மற்றும் வார தவணையாக செலுத்தி வருகின்றனர். இந்த கடனை இவர்கள் வசிக்கும் பகுதிக்கே வந்து அந்த நிறுவனங்களின் ஊழியர்கள் பெற்றுச் செல்வது வழக்கம். 

அதனடிப்படையில் நேற்று காலை குழு கடன் வசூல் செய்ய வந்த அதிகாரிகள் ஊரடங்கிலும் கூட கட்டாயம் கட்ட வேண்டும் என வற்புறுத்தியதாக தெரிகிறது. ஊரடங்கினால் தங்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளதாகவும் ஊரடங்கு  முடிந்தவுடன் கட்டி விடுகிறோம் என்று அந்தப் பெண்கள் கூறியும்அதனை ஏற்காத அதிகாரிகள் தரக்குறைவான வார்த்தைகளால் திட்டியதாக தெரிகிறது. 

இதனையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் மருதபட்டிணம் சாலையில் மண்ணெண்ணெய் கேனுடன் கூடியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்பு அப்பகுதியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள்  ஊரடங்கில் குழு கடன் கட்ட வேண்டியது கட்டாயம் இல்லை நாங்கள் பேசிக் கொள்கிறோம் என்று கூறி அவர்களை சமாதானப்படுத்திய பின்பே கலைந்து சென்றனர்.

தலைப்புச்செய்திகள்