Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கங்கை நதியில் உடல்கள் மிதந்ததாக பழைய புகைப்படத்தை வெளியிட்டு தவறான தகவலை பரப்பிய முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி மீது வழக்கு

மே 17, 2021 06:01

நாடு முழுவதும் கரோனா 2-வது அலைதீவிரமடைந்துள்ளது. இதனால் ஏராளமானோர் அடுத்தடுத்து உயிரிழந்து வருவதால் அவர்களின் உடல்களை தகனம்
செய்வதில் தாமதம் ஏற்படுவதாக புகார் எழுந்தது. இதனிடையே உயிரிழந்தோரின் உடல்களை உத்தரபிரதேசத்தில் கங்கை நதியில் வீசியது தெரியவந்தது.
அவ்வாறு பாலியா மாவட்டத்தில் கங்கை நதியில் மிதந்து வந்த 52 உடல்களை மீட்டு இறுதிச் சடங்குகளை செய்து முறைப்படி தகனம் செய்தனர்.

இந்நிலையில், ஓய்வுபெற்ற ஐஏஎஸ்அதிகாரி சூர்ய பிரதாப் சிங், கடந்த சில தினங்களுக்கு முன்பு உ.பி.யின் பாலியா அருகே கங்கை நதியில் உடல்கள் மிதந்து
வந்ததைப் பார்த்ததாக ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இது தொடர்பான புகைப்படத்தையும் வெளியிட்டிருந்தார். மேலும் உன்னாவ் நகருக்கு அருகே கங்கை
நதிக்கரையில் ஜேசிபி மூலம் பள்ளம் தோண்டி 67 உடல்களை மொத்தமாக போட்டு புதைத்ததாகவும் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

இது தொடர்பாக உன்னாவ் நகர பொதுமக்கள் கோட்வாலி காவல் நிலையத்தில் சூர்ய பிரதாப் சிங் மீது புகார் செய்தனர். உன்னாவ் நகரில் உடல்களை
புதைத்ததாக சமூக வலைதளங்களில் தவறான தகவலை பரப்பி வருவதாக அதில் கூறியிருந்தனர். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தினர்.

குறிப்பாக, பிரதாப் சிங் பதிவிட்ட புகைப்படத்தை ஆய்வு செய்தபோது, கடந்த 2014-ம் ஆண்டு உன்னாவ் அருகே கங்கை நதியில் மிதந்து வந்த புகைப்படம் என
தெரியவந்தது. இதையடுத்து, சூர்ய பிரதாப் சிங் மீது, இந்திய தண்டனை சட்டம், தகவல் தொழில்நுட்ப சட்டம், பேரிடர் மேலாண்மை சட்டம் மற்றும் உ.பி. பொது
சுகாதாரம், தொற்று நோய் தடுப்பு அவசர சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிந்துள்ளனர்.
 

தலைப்புச்செய்திகள்