Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கலெக்டரின் விழிப்புணர்வால் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்ட பழங்குடியினர்

மே 14, 2021 06:59

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் தோடர், கோத்தர், இருளர், குரும்பர், பனியர், காட்டு நாயக்கன் உள்ளிட்ட 6 வகை பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். மாவட்டம் முழுவதும் மொத்தம் 27 ஆயிரத்து 32 பேர் உள்ளனர். இதில் 8,779 பேர் 45 வயதிற்கு மேற்பட்டவர்கள். மீதமுள்ள 12 ஆயிரத்து 656 பேர் 18 வயது முதல் 44 வயது வரை உள்ளவர்கள் ஆவர்.

கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் இவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள அறிவுரைகள் வழங்கப்பட்டது. ஆனால் தடுப்பூசி குறித்த
அச்சத்தால் அவர்கள் அதனை செலுத்துவதில் தயக்கம் காட்டி வந்தனர். சிறியூர், ஆனைக்கட்டி உள்ளிட்ட கிராமங்களில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு தடுப்பூசி செலுத்த சுகாதாரத்துறையினர் சென்ற போது அவர்கள் தடுப்பூசி செலுத்த பயந்தனர்.

கொரோனா முதல் அலையின்போது பழங்குடியின மக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத நிலையில், 2-வது அலையில் கூடலூர், பந்தலூர் பகுதிகளில்
பழங்குடியின மக்கள் பலருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. எனவே மக்கள் தொகை ரீதியாக குறைவாக உள்ள அவர்களுக்கு தடுப்பூசி செலுத்த
நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதன்படி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, சுகாதாரத்துறையினர் மற்றும் மருத்துவ குழுவினருடன் நேரடியாக ஆனைகட்டி கிராமத்திற்கு சென்றார்.
அங்கு தடுப்பூசி முகாமை நடத்தி அங்குள்ள பழங்குடியின மக்களுக்கு தடுப்பூசி குறித்து விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதனை தொடர்ந்து அந்த மக்கள்
தடுப்பூசி போட முன்வந்தனர். உடனடியாக அங்கு வசிக்க கூடிய 45 வயதிற்குட்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

அப்போது கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பொதுமக்கள் மத்தியில் பேசுகையில், பழங்குடியின மக்கள் தடுப்பூசி போட்டு கொள்வதில் தயக்கங்கள் உள்ளன.
இதில் தயக்கத்திற்கோ, பயப்படுவதற்கோ ஒன்றும் இல்லை. தடுப்பூசியின் தேவை அதிகரித்துள்ள நிலையில் பழங்குடியின மக்களுக்கு முக்கியத்துவம் அளித்து
அவர்கள் இருக்கும் இடத்திற்கே வந்து தடுப்பூசி போடப்படுகிறது. எனவே பழங்குடியின மக்கள் தவறாமல் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும். பழங்குடியின மக்கள் தங்கள் பகுதிகளில் திருவிழாக்கள், சுபகாரியங்கள் போன்ற நிகழ்வுகளை தங்களது குடும்பத்தினருடன் மட்டுமே செய்து கொள்வது நல்லது. அனைவரையும் அழைத்து விழா நடத்தும் போது தொற்று எளிதாக பரவுகிறது. எனவே சுபகாரியங்களை மிக எளிமையாக நடத்த வேண்டும் என்றார்.

தலைப்புச்செய்திகள்