Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஆஸ்திரேலிய மூளையைப் பயன்படுத்தி இந்தியாவில் வலுவான இளம் வீரர்களை ராகுல் திராவிட் உருவாக்கிவிட்டார்: கிரேக் சேப்பல் புகழாரம்

மே 13, 2021 09:20

ஆஸ்திரேலியாவின் வலுவான சிந்தனை, கிரிக்கெட் மூளையைப் பயன்படுத்தி, இந்தியாவில் திறமையான, வலுவான இளம் வீரர்களைக் கொண்ட கட்டமைப்பை ராகுல் திராவிட் உருவாக்கிவிட்டார் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் கிரேக் சேப்பல் புகழாரம் சூட்டியுள்ளார்.

கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்ட்டில் இந்திய அணி 36 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி மோசமான தோல்வியைச் சந்தித்தது. 2-வது போட்டியிலிருந்து கேப்டன் கோலி, தாயகம் சென்றுவிட்டார். மூத்த வீரர்கள் ஜடேஜா, ஷமி, போன்றோர் காயத்தால் விளையாடவில்லை. ஆனால், அனுபவமில்லா இளம் வீரர்கள் சேர்ந்து ஆஸ்திரேலிய அணியைப் புரட்டி எடுத்து டெஸ்ட் தொடரை வென்றனர்.

ஆஸ்திரேலிய அணியில் அறிமுகமான பல வீரர்கள் இந்தியப் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் விரைவாக ஆட்டமிழந்தனர். பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் இளம் வீரர்கள் திறமையாகச் செயல்பட்டனர். இதற்கு முக்கியக் காரணம் தேசிய கிரிக்கெட் அகாடமியில் இளம் வீரர்களைப் பட்டை தீட்டி, செதுக்கி இந்திய அணிக்கு வழங்கி வரும் ராகுல் திராவிட்தான் காரணம் என்று புகழப்பட்டது. அது உண்மைதான் என்பதை நிரூபிக்கும் வகையில் கிரேக் சேப்பலும் தெரிவித்துள்ளார். கிரிக்கெட்.காம் இணையதளத்துக்கு கிரேக் சேப்பல் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:

''இளம் வீரர்களைத் திறமையான அளவில் உருவாக்கி இந்தியா, இங்கிலாந்து அணிகள் ஆஸ்திரேலியாவைப் பின்னுக்குத் தள்ளிவிட்டன, அவர்களுக்கு நல்ல அடித்தளத்தை உருவாக்கிவிட்டன.

அதிலும் குறிப்பாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் திராவிட், ஆஸ்திரேலியர்களின் மூளையைப் பயன்படுத்தி இந்தியாவில் இளம் வீரர்களுக்கான வலுவான கட்டமைப்பை உருவாக்கிவிட்டார். ஆஸ்திரேலியாவில் இளம் வீரர்களை எவ்வாறு நாங்கள் உருவாக்கினோமோ அதேபோன்று இந்தியாவில் இளம் வீரர்களை ராகுல் திராவிட் உருவாக்கி வருகிறார்.

வரலாற்று ரீதியாகவே இளம் வீரர்களை அதிகமாக உருவாக்கும் நாடு என்று பெயரெடுத்தோம். ஆனால், கடந்த 2 ஆண்டுகளாக அந்தப் பெயர் மாறிவிட்டது. இளம் வீரர்கள் அதிகமான அளவில் வந்தாலும் அவர்களில் பலர் எதிர்பார்த்த அளவுக்குச் சிறப்பாக விளையாட முடியவில்லை.

இளம் வீரர்களை வார்த்தெடுத்து, உருவாக்குவதில் இங்கிலாந்து அணி சிறப்பாகச் செயல்படுகிறது. எங்களைவிட இந்திய அணி இன்னும் சிறப்பாக இளம் வீரர்களை உருவாக்குகிறது. பார்டர் கவாஸ்கர் கோப்பையில் விளையாடிய இந்திய அணி ஏ அணி என்று பலரும் கூறினாலும், அதில் விளையாடிய இளம் வீரர்கள் செயல்பாடு ஏ அணி வீரர்கள் போல் இல்லாமல் அனுபவ வீரர்கள் போல் செயல்பட்டனர்''.

இவ்வாறு சேப்பல் தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்