Monday, 3rd June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

3ம் கட்ட தேர்தல் பிரசாரம் நாளை முடிகிறது: 115 பதவிக்கு 1,612 பேர் போட்டி

ஏப்ரல் 20, 2019 09:33

புதுடெல்லி: நாடு முழுவதும் 3ம் கட்ட தேர்தலை சந்திக்க உள்ள 115 மக்களவை தொகுதிகளுக்கு நாளையுடன் பிரசாரம் ஓய்கிறது. இந்த தேர்தலில் 1,612 வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில், அவர்களில் 570 பேர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. கேரளாவில் முகாமிட்டு இறுதி கட்ட பிரசாரத்தில் பிரியங்கா, ஸ்மிருதி இரானி ஆகியோர் ஈடுபட்டுள்ளனர்.  

தமிழகத்தில் உள்ள 38 மக்களவை தொகுதிகள், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதி உட்பட 95 தொகுதிகளில் கடந்த 18ம் தேதி 2ம் கட்ட தேர்தல் நடந்து முடிந்தது. முன்னதாக கடந்த 11ம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு 20 மாநிலங்களில் 91 தொகுதிகளுக்கு நடந்து முடிந்தது. இந்நிலையில், அசாமில் 4, பீகாரில் 5, சட்டீஸ்கரில் 7, கோவாவில் 2, குஜராத்தில் 26, ஜம்மு காஷ்மீரில் 1, கர்நாடகாவில் 14, கேரளாவில் 20, மகாராஷ்டிராவில் 14, ஒடிசாவில் 6, உத்தரப் பிரதேசத்தில் 10, மேற்கு வங்கத்தில் 5, தத்ரா மற்றும் நகர்ஹவேலியில் 1, டாமன் அண்ட் டையூவில் 1 என 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 115 மக்களவை தொகுதிகளில் வரும் 23ம் தேதி 3ம் கட்ட தேர்தல் நடக்கிறது. 

அன்றைய தினம், ஒடிசாவில் உள்ள 42 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடக்கிறது. இதில், கேரளாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடும் வயநாடு தொகுதியும் அடங்கும். இந்த தொகுதிகளில் நாளை மாலை 5 மணியுடன் பிரசாரம் ஓய்கிறது. இந்நிலையில், ராகுல்காந்தி போட்டியிடும் வயநாடு தொகுதியில் பிரசாரம் செய்வதற்காக, அவரை எதிர்த்து அமேதி தொகுதியில் போட்டியிடும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, இன்று கேரளாவில் பாஜ வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்கிறார். அதேபோல், ராகுலை ஆதரித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா பிரசாரம் செய்கிறார்.  

வரும் 23ம் தேதி நடக்கும் 3ம் கட்ட தேர்தலில் 1,612 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களில் 570 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் 90 வேட்பாளர்களில் 40 பேர் மீதும், பாஜ கட்சி சார்பில் போட்டியிடும் 97 பேரில் 38 பேர் மீதும் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. மேலும், 14 வேட்பாளர்கள் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு நீதிமன்றத்தால் தண்டனை பெற்றவர்கள்; 13 பேர் பெண்கள் தொடர்பான குற்றங்களில் ஈடுபட்டவர்கள்; 26 பேர் வெறுப்பு பேச்சு பேசியவர்கள் ஆவர்.  

சமாஜ்வாதி கட்சியின் வேட்பாளர் குமார் தேவேந்திர சிங், தனது அபிடவிட்டில் தனக்கு ரூ.204 கோடி இருப்பதாக தெரிவித்துள்ளார். அதற்கடுத்ததாக தேசியவாத காங்கிரஸ் கட்சி ேவட்பாளர் சத்ரபதி ரூ.199 கோடி சொத்து இருப்பதாக தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த 3ம் கட்ட வாக்குப்பதிவில் அதிகபட்சமாக 115 மக்களவை உறுப்பினர்கள் தேர்வாக உள்ளதால், பாஜ - காங். கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் இறங்கி உள்ளனர். 

தலைப்புச்செய்திகள்