Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

குடும்பத்தினர் கரோனாவால் பாதிக்கப்பட்டபோதிலும் ஆக்சிஜன் உற்பத்தியில் தொடர்ந்து ஈடுபடும் ஐ-நாக்ஸ் நிறுவன ஊழியர்கள்

மே 09, 2021 07:29

தங்களது குடும்ப உறுப்பினர்கள் கரோனா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் மக்களின் உயிர் காக்கும் ஆக்சிஜன் உற்பத்தியில் ஐ-நாக்ஸ் நிறுவன ஊழியர்கள் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். ஏப்ரல் மாதம் பிற்பாதியிலிருந்தே நாட்டின் பெரும்பாலானபகுதிகளில் ஆக்சிஜனுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மருத்துவ சிகிச்சைக்கான ஆக்சிஜன் உற்பத்தியில் நாட்டின் முன்னணி நிறுவனமாகத் திகழ்கிறது ஐ-நாக்ஸ் ஏர்.

அதிகரித்து வரும் தேவையைக் கருத்தில் கொண்டு இந்நிறுவனம் தனது உற்பத்தித் திறனை 300 சதவீத அளவுக்கு அதிகரித்துள்ளது. இந்நிறுவனம் உற்பத்தி செய்யும் ஆக்சிஜன் 16 மாநிலங்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. அவற்றின் விநியோகம் குறித்தும் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இந்நிறுவனத்தின் இயக்குநரான சித்தார்த் ஜெயின், 24 மணி நேரமும் ஆலையிலேயே தங்கி உற்பத்தியை கவனித்து வருகிறார். இவருக்கும் கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இதேபோல பல உயர் அதிகாரிகளும் கரோனா பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

நாட்டில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்ட உடனேயே மாநில முதல்வர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து ஆக்சிஜன் விநியோகத்தை தொடர்ந்து இந்நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இந்நிறுவனம் தினசரி 2,500 டன் ஆக்சிஜனை உற்பத்தி செய்கிறது.

இந்நிறுவனத்தின் மோதி நகர் ஆலையின் மேலாளர் பல நாள்களாக வீட்டிற்கு செல்லாமல் ஆக்சிஜன் உற்பத்தியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இவரது சகோதரி கரோனா தொற்று காரணமாக டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். "எனது சகோதரி டெல்லி மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வருகிறார். இருப்பினும் அவர் மிகச் சிறந்த போராளி, இந்நோயிலிருந்து அவர் மீண்டு வருவார் என்ற நம்பிக்கை உள்ளது. இருப்பினும் நாளுக்கு நாள் நாட்டில் பல பேர் கரோனா நோய் தொற்றுக்கு ஆளாகி உயிருக்குப் போராடி வருகின்றனர். அவர்களுக்கு உதவுவதற்காக ஆக்சிஜன் உற்பத்தியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம்" என அந்த மேலாளர் கூறினார்.

பணியாளர்கள் தொடர்ந்து உற்சாகத்துடன் ஈடுபடும் வகையிலும், டிரைவர்களை ஊக்குவிக்கும் பணியிலும் விநீத் ஜெயின் ஈடுபட்டுள்ளார். இதுபோல ஒரு மாதத்துக்கும் மேலாக தனது மனைவி, குழந்தைகளைப் பார்க்கவில்லை என்கிறார் ஆக்சிஜன் டேங்கர் லாரி டிரைவரான பங்கஜ் சிங்.

தலைப்புச்செய்திகள்