Monday, 3rd June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இந்தியாவில் சில வாரங்களுக்கு லாக்டவுன் அவசியம்: அமெரிக்க தொற்றுநோய் தலைமை மருத்துவர் அறிவுரை

மே 01, 2021 09:07

இந்தியாவில் பரவிவரும் கரோனா வைரஸ் 2-வது அலையைக் கட்டுப்படுத்த உடனடியாக சில வாரங்களுக்கு லாக்டவுனை அறிவிக்க வேண்டும் என அமெரிக்காவின் தொற்றுநோய் பிரிவின் தலைமை மருத்துவர் அந்தோனி ஃபாஸி தெரிவித்துள்ளார். இந்தியாவில் கரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமாகப் பரவி வருகிறது. நாள்தோறும் லட்சக்கணக்கில் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதில் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரையில்லாத வகையில் 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இந்தியாவில் நிலவும் ஆக்சிஜன் பற்றாக்குறை, தடுப்பூசி பற்றாக்குறை, மருந்துகள் ஆகியவற்றைச் சமாளிக்கும் வகையில் அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், அயர்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஆதரவுக் கரம் நீட்டி உதவிகளை வழங்கி வருகின்றன. இந்நிலையில் அமெரிக்காவின் தொற்றுநோய்ப் பிரிவின் தலைமை மருத்துவர் அந்தோனி ஃபாஸி நாளேடு ஒன்றுக்குப் பேட்டி அளித்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

''இந்தியாவில் மிகக் கொடூரமான வகையில் கரோனா வைரஸ் 2-வது அலை பரவி வருகிறது. இந்த கரோனா வைரஸ் 2-வது அலையை உடனடியாகத் தடுத்து நிறுத்தவும், பரவல் சங்கிலியை உடைக்கவும் சில வாரங்களுக்கு லாக்டவுன் அறிவிப்பது அவசியமானது. உடனடியாக ஆக்சிஜன் சப்ளை, மருந்துகள், தடுப்பூசிகள், பிபிஇ பாதுகாப்பு ஆடைகளை அதிகமாக சப்ளை செய்ய வேண்டும். அனைவரையும் ஒன்றிணைத்து இந்தியா இந்த நேரத்தில் கரோனா சிக்கலைக் கையாள வேண்டும்.

அதே நேரத்தில் கரோனா வைரஸை வென்றுவிட்டோம் என்று அறிவிப்பதெல்லாம் முதிர்ச்சியற்றது. இந்தியா இப்போது செய்ய வேண்டியது, உடனடியாக சில வாரங்களுக்கு லாக்டவுனை அறிவித்து கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த வேண்டும். இதுதான் இப்போது முக்கியமானது என நினைக்கிறேன். சீனாவில் கரோனா வைரஸ் பரவிய நேரத்தில் அதாவது கடந்த ஆண்டில், அதைச் சமாளிக்க முழுமையான லாக்டவுனை சீனா அறிவித்தது. அதுபோன்று இந்தியாவும் லாக்டவுனை அறிவிக்க வேண்டும்.

இந்தியாவில் லாக்டவுன் நீண்ட காலத்துக்கு அதாவது 6 மாதங்கள் வரை அல்ல. தற்காலிகமாக 2-வது அலையின் பரவல் சங்கிலியை உடைக்கவும், பரவலைத் தடுக்கவும் லாக்டவுன் அவசியமானது. லாக்டவுன் அறிவித்து மக்கள் நடமாட்டத்தைக் குறைத்தாலே, பரவல் குறைந்துவிடும். நீண்ட காலத்துக்கான லாக்டவுனை யாரும் விரும்புவதில்லை. இருப்பினும் சில வாரங்களுக்கு நாம் லாக்டவுன் நடவடிக்கை எடுப்பது கரோனா வைரஸ் பரவலில் குறிப்பிடத்தகுந்த தாக்கத்தை ஏற்படுத்தும்.

சாலைகளில் சிலர் தங்கள் சகோதரிகளையும், பெற்றோரையும் படுக்கையில் கிடத்தி ஆக்சிஜனுக்காக அலைமோதுவதைப் பார்த்தேன். அதுபோன்ற செய்திகளையும் கேட்டேன். கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதில் லாக்டவுன் நடவடிக்கை எந்த அளவு முக்கியமானதோ அதேபோன்று தடுப்பூசியும் அவசியம். இந்தியாவில் தடுப்பூசி செலுத்தும் வேகம் போதாது. தற்போதுவரை 140 கோடி மக்களில் 2 சதவீதம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. முழுமையாகத் தடுப்பூசி செலுத்த நீண்ட தொலைவு பயணிக்க வேண்டும்''.

இவ்வாறு அந்தோனி ஃபாஸி தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்